Home (Malayalam)
என் தோழியின் பரிந்துரையின் பேரில் நான் சமீபத்தில் பார்த்த திரைப்படம் "Home". மலையாள படங்களின் மேக்கிங், நடை முதலியவை எனக்கு பழக்கம் ஆதலால் படத்தின் வேகம் என்னை பெரிதும் பாதிக்கவில்லை. கதை என்னவாக இருக்கும் என்பது படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது எனினும் அக்கதை யாரை எல்லாம் அழைத்துக் கொண்டு எங்கெல்லாம் பயணம் செய்து முடியப்போகிறது என்பதைத் தான் நாம் அடுத்த 2:45 மணி நேரம் பொறுமையாக பார்க்க வேண்டிய இருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் நாம் அனைவருமே தொழில் நுட்பத்தால் ஆட்டி வைக்கப்படும் கைப்பாவைகள் தான், கைபேசியின் அடிமைகள் தான் அதில் சந்தேகம் ஒன்றும் இல்லை அதிலிருந்து அவ்வப்போது வெளிவருவது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவருக்கும் நலம் பயக்கும் என்பதை இயக்குனர் போதனைப் படமாக இல்லாமல் ரசிக்கும் படி சொல்ல முயன்றிருக்கிறார். திரைக்கதை தான் இத்திரைப்படத்தின் "Hero". இயக்குனர் Rojin Thomas மிகப் பொறுமையாக அதை வடிவமைத்திருக்கிறார். மலையாளப் படங்கள் என்றால் கண்ணுக்கினிய காட்சிகளுக்கும் அதோடு இணைந்த இனிய பாடல்களுக்கும் என்ன குறை? ...