பொன்னியின் செல்வன் - 1
2007-ம் ஆண்டு என் மகளின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்த தருணம். அவளுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் என் கணவர் பரிந்துரைத்த பெயர்கள் நந்தினி, வானதி, பூங்குழலி. என்ன இது பட்ட பழைய பெயர்கள் என்று கேட்ட என்னிடம் "காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள்" என்று பொன்னியின் செல்வன் நாவலைப் புகழ்ந்து பேசினார் என் கணவர். 2017-ம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்க நேர்ந்தது. கதையின் கரு பிடித்திருந்தாலும் போக்கு சலிப்பை வரவழைத்தது. என்னால் ஆஹா ஓஹோ என்றெல்லாம் ரசிக்க முடியவில்லை. இன்று மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் PS-1 திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது ரசிக்காமல் இருக்க முடியவில்லை. நாம் Promo-வில் பார்த்து வியந்த காட்சிகள், வசனங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. தொய்வின்றி வெகு வேகமாக நகரும் திரைப்படம் ஒரு Extended Promo-வைப் பார்ப்பது போலத்தான் இருந்தது. கேமராவும் அங்கும் இங்கும் அலை பாய்ந்து நம்மையும் அந்த ஓட்டத்தில் இணைக்கிறது. அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் ...