தளபதி (1991)
முன் குறிப்பு : கல்கியின் காலத்தால் அழியாத தேசியமயமாக்கப்பட்ட "பொன்னியின் செல்வன்" நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். அனைவராலும் எதிர்பார்க்கப்படும் (ஐயோ..இவர் சொதப்பாம எடுக்கணுமே) இத்திரைப்படம் இம்மாத இறுதியியில் திரைக்கு வருகிறது.
1991-ம் வருடம் தீபாவளிக்கு வெளி வந்த ரஜினியின் திரைப்படம் "தளபதி". வழக்கமாக சூப்பர் ஸ்டார் படம் என்றால் தியேட்டருக்கு சென்று குடும்பத்துடன் படம் பார்க்கும் எங்கள் குடும்பம் அந்த வருடம் செல்லவில்லை காரணம் மணிரத்னம் படமெல்லாம் சின்ன பசங்களுக்கு பிடிக்காது என்ற காரணம் ஆனால் அடுத்த பத்து நாட்களுக்குள்ளேயே படத்தை கேபிள் டிவியில் போட்டுவிட்டார்கள் நாங்களும் பார்த்து விட்டோம் அது வேறு விஷயம்.
பத்து வயதிற்குள் இருந்த எனக்கு (அப்போது) அந்தப் படம் அவ்வளவாக பிடிக்கவில்லை எனினும் தளபதி போன்ற போர் உடையில் ரஜினி இருந்த போஸ்ட்ரைப் பார்த்ததால் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
சில படங்களை நாம் சிறுவயதில் பார்த்திருந்தாலும் அதன் காட்சிகளை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு அமைந்திருக்கும் அதனால் அதன் நினைவுகள் நம் மனதில் என்றும் பசுமையுடன் படர்ந்திருக்கும் ஆனால் தளபதியைப் பொறுத்தவரை அப்படி ஒன்றும் இல்லை அதனால் முப்பது வருடங்கள் கழித்து நேற்று இப்படத்தை மறுமுறை பார்த்தேன்.
ராமாயணம், மகாபாரதம் என்ற இரு பெரு காவியங்களை மணிரத்னம் நிகழ்காலத்திற்கு ஏற்ற வண்ணம் கதைகளாக்கி இயக்கியிருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.
தளபதியில் ரஜினியின் கதாபாத்திரம் கர்ணனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது என்ற விஷயமே எனக்கு சில வருடங்களுக்கு முன் தான் தெரியும். கர்ணன் என்றதும் நம் நினைவிற்கு வருவது
1.பிறந்தவுடன் தாயால் கை விடப்படும் கர்ணன் தம் வாழ்நாள் முழுதும் அதை எண்ணி எண்ணித் தவிக்கிறான்.
2. தனக்கு ஆதரவு அளித்து சமூகத்தில் ஓர் அடையாளம் அளித்ததால் நண்பன் அதர்ம பாதையில் செல்கிறான் என்று தெரிந்தும் தோள் கொடுக்கிறான். உயிரையும் கொடுக்கிறான்.
3.கேட்பவர்களுக்கு இல்லை என்று கூறாமல் வாரி வழங்கும் வள்ளல்.
இந்த மூன்று கருத்துக்களையும் மீள மீள சொல்லி நம் பொறுமையை சோதிக்கிறது "தளபதி" திரைப்படம். அனைத்து கதாபாத்திரங்களும் இதே கருத்துக்களை வெளி கொணர்வதற்காகவே எழுதப்பட்டிருக்கிறது.
உதாரணமாக திரௌபதியின் சுயம்வரத்தில் கர்ணனின் குலத்தைப் பற்றி வரும் கேள்வியை இங்கு சாருஹாசன் கேட்கிறார். துரியோதனனை விட்டு விட்டு பாண்டவரின் அணியில் சேர கோரி அவனின் பிறப்பின் ரகசியத்தைக் கூறும் வாசுதேவ கிருஷ்ணரின் வேலையை ஜெய் ஷங்கர் செய்கிறார். ரஜினியே தனது தாய் ஸ்ரீவித்யாவிடம் தம்பி அர்ச்சுனனை கொல்ல மாட்டேன் என்று வாக்களிக்கிறார்.
நீ என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம குடுப்பியாமே? என்று அனைவரும் கேட்டு கேட்டு இது கர்ணன் கதாபாத்திரம் தான் என்று உறுதி செய்து கொண்டே இருக்கிறார்கள் முக்கியமாக ரஜினி வரும் காட்சிகளில் எல்லாம் சூரியன் உதிக்கும் அல்லது அஸ்தமணிக்கும் இது போதாதா (கர்ணன்) சூரிய மைந்தன் கதை இது என்று Establish செய்ய?
மேலும் பாண்டவ புரம் என்று வசனத்தில் வருவது "நீ 5 பிள்ளைகளை பெற்றிருக்க வேண்டும்" என்று ஸ்ரீ வித்யாவைப் பார்த்து கேட்பது, அம்ரிஷ் புரியின் கேரக்டருக்கு கலி வரதன் என்று பெயரிட்டிருப்பது, ஊர் மக்களின் கண்களுக்கு தேவராஜ் நல்லவன் என்று கூறுவது என்று Decoding செய்து கொண்டே போகலாம் ஆனால் கடைசிக் காட்சியில் துரியோதனன் இறந்து கர்ணன் பிழைக்கிறான் இது என்ன லாஜிக் என்று விளங்கவில்லை.
இந்த ஒப்பீடு எல்லாம் இல்லாமல் தளபதி படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் மணிரத்னம் ஸ்டைலில் காதில் விழாத வசனங்கள், எந்த Lead-ம் இல்லாமல் தடால் தடால் என்று வரும் பாடல்கள், கடுகு போன்ற கதையை வைத்துக் கொண்டு ஒரே இடத்தில் சுற்றும் காட்சிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் எனினும் Bore அடித்தது என்று கூற முடியாது. (ப்ளூ சட்டை அண்ணன் என்ன சொல்லி இருப்பாரோ😕)
படம் முழுக்க சீரியஸ் mode-ல் வரும் ரஜினி நடிப்பில் அசத்துகிறார் முக்கியமாக ஸ்ரீவித்யாவுடனான எமோஷனல் காட்சியில் நெகிழ வைக்கிறார். பல திரைப்படங்களில் ரஜினி அனாதையாக வருவார் ஆனால் ஒரே காட்சியில் அதைப் பற்றி பேசிவிட்டு காமெடி, டூயட், பன்ச் வசனம், சண்டை என்று வேகமாக சென்று கொண்டே இருப்பார் ஆனால் தளபதியின் சூப்பர் ஸ்டாராக இல்லாமல் சூர்யாவாக ஜொலிக்கிறார். ஆக்சனில் தூள் கிளப்புகிறார்.
இந்த 1991-ம் வருடம் Box Office Collection-ஐ உலக நாயகன் கமல் சுலபமாக அள்ளி இருந்திருக்கலாம் ஆனால் அவர் வெளியிட்ட படம் "குணா" 😏
தளபதி திரைப்படத்தைக் குறித்த உங்களின் நினைவுகளையும், அனுபவங்களையும் கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்களேன்!!!
பின் குறிப்பு : படம் முழுக்க இயக்குனர் கோவில், குளம், கலெக்டர் வீடு, குப்பம் என படிக்கட்டுகளை காட்டிக் கொண்டே இருக்கிறார் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை 😀
Comments
Post a Comment