அக்னிச் சிறகுகள்- புத்தக விமர்சனம்
முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி, முனைவர் ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களுடன் உரையாடி சேகரித்த தகவல்களை ஒருங்கிணைத்து அருண் திவாரி எழுதிய " Wings Of Fire" புத்தகத்தின் தமிழாக்கம் தான் " அக்னிச் சிறகுகள் " கண்ணதாசன் பதிப்பகம் 2004-ம் ஆண்டில் பிரசுரித்த இப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் மு.சிவலிங்கம். கவிதைகளை கவிஞர் புவியரசு மொழியாக்கம் செய்துள்ளார். உள்ளூர் நூலகத்தில் கிடைத்த இந்த பொக்கிஷத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அப்துல் கலாம் ராமேஸ்வரத் தீவில் 1931-ம் வருடம் பிறந்ததிலிருந்து தொடங்கும் புத்தகம் அவரின் அறுபது கால வாழ்க்கையை நமக்கு மிக விரிவாக விளக்குகிறது. அவரின் தொடக்கப்பள்ளி படிப்பு, பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் என அனைவரின் குணாதிசயங்களையும் எடுத்துரைத்த வண்ணம் செல்லும் இப்புத்தகம் பின் ராமநாதபுரத்தில் அவரின் உயர்நிலைக்கல்வி, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் Intermediate பின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் என்று தொடர்கிறது. தன்னுடைய தொடக்க காலத்தில் அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரணானது என்று எண்ணிக் கலங்கும் கலாம் தன்ன...