அக்னிச் சிறகுகள்- புத்தக விமர்சனம்

முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி, முனைவர் ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களுடன் உரையாடி சேகரித்த தகவல்களை ஒருங்கிணைத்து அருண் திவாரி எழுதிய " Wings Of Fire" புத்தகத்தின் தமிழாக்கம் தான் " அக்னிச் சிறகுகள் "

கண்ணதாசன் பதிப்பகம் 2004-ம் ஆண்டில் பிரசுரித்த இப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் மு.சிவலிங்கம். கவிதைகளை கவிஞர் புவியரசு மொழியாக்கம் செய்துள்ளார்.

உள்ளூர் நூலகத்தில் கிடைத்த இந்த பொக்கிஷத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

அப்துல் கலாம் ராமேஸ்வரத் தீவில் 1931-ம் வருடம் பிறந்ததிலிருந்து  தொடங்கும் புத்தகம் அவரின் அறுபது கால வாழ்க்கையை நமக்கு மிக விரிவாக விளக்குகிறது.

அவரின் தொடக்கப்பள்ளி படிப்பு, பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் என அனைவரின் குணாதிசயங்களையும் எடுத்துரைத்த வண்ணம் செல்லும் இப்புத்தகம் பின் ராமநாதபுரத்தில் அவரின் உயர்நிலைக்கல்வி, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் Intermediate பின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் என்று தொடர்கிறது.

தன்னுடைய தொடக்க காலத்தில் அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரணானது என்று எண்ணிக் கலங்கும் கலாம்  தன்னுடைய ஆழ்ந்த இறைநம்பிக்கையே தன்னை வழிநடத்தும் கலங்கரை விளக்கு என்று நம்புகிறார்!!!

அவரின் இயற்பியல் ஆர்வம் எவ்வாறு பிறந்தது அது விமான வடிவைமைப்பு என்னும் தளத்திற்கு எவ்வாறு மாறியது என்று தொழில் நுட்ப விளக்கங்களுடன் ஒரு ஆசிரியரின் தொனியில் நமக்கு விவரிக்கும் இப்புத்தகம் நடு நடுவே சிறிது சோர்வைத்தரும் இடங்களில் எல்லாம் நம்மை நிமரவைக்கும் வண்ணம் கவிதைகளையும் Motivational அறிவுரைகளையும் கொடுத்தவண்ணம் உடன் வருகிறார் அப்துல் கலாம் அவர்கள்.

கல்லுரி படிப்பு முடிந்ததும் அவர் தான் விரும்பிய துறையில் பணியில் சேர முடியாமல் போனாலும் எவ்வாறு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவின் முதல் செயற்கைகோள் SLV-ன் திட்ட இயக்குனர் நிலைக்கு மிக மெதுவாக ஆரவாரமின்றி தன்னை சுற்றி உள்ளவர்களை அரவணைத்த வண்ணம் உயர்கிறார் என்பதை படிக்க சுவாரசியமாக இருந்தது.

முன்னேறி வரும் நாடான இந்தியா 1960-களில் இருந்தே  எவ்வாறு சுயசார்பு நாடாக தன்னை நிலைநிறுத்தி கொள்ளவும் விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆயுதம் என்று தன்னை உயர்த்திக் கொள்ளவும் பாடுபட்டது என்பதை படிக்க படிக்க நம் நாட்டின் மேல் இருக்கும் மதிப்பு மேலும் உயர்கிறது எனலாம்.

இத்துறையில் முன்னோடிகளான விக்ரம் சாராபாய், தவான் போன்றோருடன்  பிரகாஷ் ராவ், சுதாகர் என தனக்கு உறுதுணையாக இருந்த பலரைப்பற்றியும் அரசியல்வாதிகளின் காய்நகர்த்தலோடு  Work Space Politics-ம் தன்னை எவ்வாறு அலைக்கழித்தது என்பதையும் சுவாரசியமாக நமக்கு சொல்லிக்கொண்டே செல்கிறார் டாக்டர் கலாம் .

புத்தகத்தின் நான்காவது அத்தியாயமான "அமைதிப்படுத்துதல்" பகுதியை படிக்கும் போதெல்லாம் ஒரு நூலகத்திற்கு சென்று 1980-களின் செய்தித்தாள்களை புரட்டிப்பார்க்கும் மெய்சிலிர்க்கும் அனுபவம் ஏற்பட்டது.


ஏனென்றால் இரவு பகல் பாராமல்  தாங்கள் வடிவமைத்த அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக சோதிப்பதற்குள் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை (Technical Difficulties) விரிவாக சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கு இச்சமூகத்தில் உள்ள பாமர மக்கள் துவங்கி மெத்த படித்த மேதாவிகள் வரை எவ்வாறு எதிர்வினை ஆற்றினர், பத்திரிகை ஊடகங்கள்  எம்மாதிரியான கார்ட்டூன்களை வரைந்து கேலி செய்தன, உலக நாடுகள் எவ்வாறு தொழில்நுட்ப தடைகளை விதித்து இந்தியாவை எதிர்த்தது என்று மிக அழகாக விவரித்த வண்ணம் செல்கிறார் ஆசிரியர் கலாம்.

அப்துல் கலாம் ஜனாதிபதி ஆவதற்கு முன் அவரை எனக்குத் தெரியாது. அவரின் இப்புத்தகத்தைப் பற்றி நடிகர் விவேக் சொல்லத் தான் அறிந்து கொண்டேன் அதனால் எனக்கு இப்புத்தகம் ஒரு தகவல் களஞ்சியமாகப் பட்டது.

தனது வாழ்க்கையையே நாட்டின் விண்வெளி, செயற்கைகோள் ஆராய்ச்சி  மற்றும் அணு ஆயுத வளர்ச்சிக்காக அர்ப்பணித்த அப்துல் கலாம் அவர்கள் தனது விஞ்ஞானி வாழ்க்கையை விவரிக்கும் போது அதில் பின்னிப்பிணைந்துள்ள Technical சமாச்சாரங்களை வாசகர்களுக்கு எங்கே புரிபப்போகிறது என்று நினைத்து விட்டிருந்தால்  இப்புத்தகத்தின் உயிரோட்டம் தடை பட்டிருக்கும்.

தனது குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் அவர்களிடம் அவர் கொண்டிருந்த அளவு கடந்த பாசத்தையும் அங்கங்கே எடுத்துரைக்கும் அவர் புத்தகம் முழுவதும் மத நல்லிணக்கம் சகிப்புத்தன்மை அனைவரையும் சமமாக பாவிக்கும் குணம், மரம் வளர்தலின் முக்கியத்துவம் , முக்கியத் துறைகளில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பு  ஆகியவற்றைப் பற்றி கோடிட்டுக் கொண்டே செல்கிறார்.

ஆசை, நம்பிக்கை, விடா முயற்சி இவையே ஒருவனை உயர்த்தும் ஆயுதம் மனதிலிருக்கும் அக்கினியை நீர்த்துப்போகாமல் நிலைநிறுத்தச் செய்யும் எரிபொருள் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

230 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தை நீங்கள் இதுவரை  வாசித்ததில்லை என்றால் நேரம் கிடைக்கும் பொழுது சற்று பொறுமையை வரவழைத்துக் கொண்டு முயற்சியுங்கள். அமைதியான தெளிந்த நீரோடைக் கரையில் அமர்ந்து காற்று வாங்கிய அனுபவத்தைப் பெறுவீர்கள்!!!

 

Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா