Laapataa Ladies - Hindi Movie
"இறுக பற்று" திரைப்படத்திற்குப் பிறகு பலரும் என்னை பார்க்கச் சொல்லி, விமர்சனம் செய்ய வேண்டி பரிந்துரைத்த திரைப்படம் இந்த " Laapataa Ladies".
மத்திய பிரதேசத்தில் எங்கோ மூலையில் வாழும் விவசாயி தீபக் தனது புது மனைவி Phool உடன் இரண்டு நாள் மாமியார் வீட்டில் விருந்தை முடித்து விட்டு தனது சொந்த கிராமத்திற்கு டிரக், ட்ரெயின் என்று பிரயாணம் செய்து ஊர் திரும்புகிறான். நடு இரவில் கும் இருட்டில் தலையில் முக்காடு போட்டிருந்த வேறு ஒரு மணப்பெண்ணை தனது மனைவி என்றெண்ணி தவறுதலாக வீட்டிற்கு அழைத்து வர அவன் வாழ்க்கையில் பின் என்ன நடந்தது என்பது தான் கதை.
"அவனோடு தவறுதலாக தெரிந்தே வரும் மணப்பெண் ஜெயா/புஷ்பா - வின் நோக்கம் என்னவாக இருக்கும்?!" என்று யூகித்து யூகித்து சோர்ந்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் திரைக்கதை செல்லும் வழியையும் நம்மால் கணிக்கவே முடியவில்லை. அடுத்ததாக நடிகர்களின் தேர்வு என இவை அனைத்தும் தான் இப்படத்தை நோக்கி பலரை ஈர்த்த காரணங்கள் என்று சொல்ல வேண்டும்.
மிக சொற்பமான கதாபாத்திரங்களையும் ஒரு வரி கதையையும் வைத்துக் கொண்டு பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் கட்டி வைக்க முடியுமா? விடை இப்படத்தின் வெற்றி!!!
படம் முழுக்க அங்கங்கே வரும் Subtle comedy தீபக்- Phool ற்கு இடையே ஓடும் மெல்லிய காதல் படத்திற்கு ப்ளஸ்.
படத்தின் நெகடிவ் என்ன என்று கேட்டால் இயக்குனர் கிரண் ராவ் தேவைக்கு அதிகமான Message-களை சொல்ல முற்பட்டு அது ஓவர் டோஸ் ஆகிவிட்டதோ என்ற எண்ண வைத்து விட்டது இருப்பினும் அவர் சொல்ல வந்த கருத்துக்கள் யோசனை செய்யப்பட வேண்டியவை.
கிராமக் கட்டுப்பாடு, குடும்ப மரியாதை என்று உங்கள் பார்வையை முகத்தில் போடப்பட்டிருக்கும் முக்காடு மறைத்தாலும் அகக்கண்ணை திறந்து வைத்து கொண்டு அனைத்தையும் கவனியுங்கள், செயல்படுங்கள் என்ற பொதுக் கருத்தோடு பின் வரும் விஷயங்களையும் படம் முழுக்க தூவி இருக்கிறார்.
1. பெண்கள் தங்கள் இலட்சியத்தை அடைய போராட வேண்டும் - ஜெயாவின் கதாபாத்திரம்
2. பெண்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் - அண்ணி கதாபாத்திரம்
3. மாமியாரும் மருமகளும் நண்பர்களாகவும் இருக்க முயற்சிக்கலாம் - தீபக்கின் தாய் மற்றும் பாட்டி
4. குடும்பப் பெண்ணாக இருப்பதில் தப்பில்லை ஆனால் அக்குடும்பத்தை பொருளாதார ரீதியில் தலை நிமிர வைக்க நம்மால் முடிந்த வேலைகளை செய்வதிலும் குற்றமில்லை - Phool குமாரி
5. ஏமாற்றும் உறவுகள் இருக்கலாம் அதற்காக மனித உறவுகளையே வெறுத்து உணர்ச்சி அற்ற ஜடமாக வாழ வேண்டியதில்லை - மஞ்சு மாய்
6. வெளித்தோற்றத்தைக் கொண்டு ஒருவரை எடை போடக் கூடாது - ரயில் நிலையத்தில் Phool க்கு உதவுபவர்கள்.
7. சந்தர்ப்ப சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி இலாபம் சம்பாதித்தாலும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டிய இடத்தில செயல்பட்டால் நீங்களும் நல்லவர்களே - இன்ஸ்பெக்டர் ஷியாம்
8. அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாமலேயே அதற்கு தீர்வு தருகிறேன் என்று குளறுபடி செய்வது - அரசியல் கட்சிக் கூட்டம்
9. Last but not least - Organic Farming
மேற்குறிய விஷயங்களை ரசிக்கும் வண்ணம் நமக்கு கொடுத்திருக்கும் இயக்குனரை பாராட்டலாம். இப்படத்தையும் ஒருமுறை பார்க்கலாம்.
இந்த 21-ம் நூற்றாண்டிலும் படித்த பணிக்கு செல்லும் நகரத்தில் வாழும் பெண்களாகிய நாமும் சில விஷயங்களில் Phool குமாரியைப் போல கணவர் பார்த்துக் கொள்வார் என்று கண்களை முடிக் கொண்டுதானே இருக்கிறோம். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை ஆனால் அவ்வாறு இருப்பதில் எனக்கு ஒரு பரமானந்தம்... பேரானந்தம் !!!
"Laapataa Ladies" - தேனில் குழைத்த நாட்டு மருந்து .
பின்குறிப்பு - தீபக்கின் தாத்தா பராக் பராக் என்று சொல்லிக் கொண்டே இருப்பது போல பல முறை காட்டப்படுகிறது. இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்று என்னால் Decode செய்ய முடியவில்லை . உங்களுக்கு தெரிந்திருந்தால் கமெண்டில் சொல்லுங்களேன்!!!
Comments
Post a Comment