சத்திய சோதனை

நான் சமீபத்தில் வாசித்து முடித்த புத்தகம் மகாத்மா காந்தியின் சுயசரிதையான "சத்திய சோதனை- ரா. வேங்கடராஜுலு-வின் தமிழாக்கம்".  623 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தை (பனிரெண்டாம் பதிப்பு) நவஜீவன் பிரசுலாயம் வெளியிட்டுள்ளது. 

இந்தியர்களாக பிறந்த அனைவரும் தங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சமயத்தில் இப்புத்தகத்தை கடந்துதான் வந்திருப்பர். முழுவதுமாக வாசிக்கும் வாய்ப்பு இல்லாதிருந்தாலும் இப்புத்தகத்தில் குற்றிப்பிடப்பட்டுள்ள ஒரு  சில முக்கிய நிகழ்வுகளையாவது  அறியாதவர் இருப்பது அரிது.

சராசரி மனிதனாக இருந்த மோகன்ராம் காந்தி எவ்வாறு மகாத்மா ஆனார், அவரின் வாழ்க்கைப்பயணம்  அவரை எவ்வாறு அப்பாதையில் இட்டுச் சென்றது என்பதை இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. செயற்கைத்தன்மை எள்ளளவும் இன்றி மகாத்மா இதை விவரித்திருப்பது அற்புதம்.  காலம் கடந்தும் இப்புத்தகம் நிலைத்து  நிற்பதற்கு அதுவே காரணம் என்றும் தோன்றுகிறது.

அவரின் இளைமைக்காலங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் அத்தியாயங்கள் நாம் அனைவரும் அறிந்ததே. பின் அவர் பாரிஸ்டர் ஆவதற்கு லண்டன் செல்கிறார். கூச்ச சுபாவம் கொண்டவராகவும் , அதிக ஆங்கிலப் புலமை அற்றவராகவும்  இருந்தாலும்  எவ்வாறு பல தரப்பட்ட மனிதர்களின் நட்பையும் தொடர்பையும் தக்கவைத்துக் கொள்ளுகிறார் என்று வாசிக்கும் பொழுது வியப்பாக உள்ளது. புதிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்  அவரைப் பற்றிக் கொள்ள புத்தகங்களைப் வாசிக்கும் பழக்கத்தை அங்குதான் அவர் கையிலெடுக்கிறார்.

பின் அவரின் தென்னாப்பிரிக்க பயணம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை  நாம் அறிந்திருந்தாலும்  "வக்கீல்" தொழில் செய்யச் சென்றவர் எவ்வாறு மக்கள் செல்வனாக மாறினார்  என்பதை வாசிப்பினூடே புரிந்து கொள்ள முடிகிறது. அகிம்சை என்னும் கொள்கை அவர் வாழ்வில்  வருவதற்கு  முன்பே... எங்கு சென்றாலும் எவரிடமும் பகைமை பாராட்டாமல் எவ்வாறு அவர்களின்  நண்பராக மாறுகிறார்?,! நேர்மை  உள்ளம் கொண்ட ஆங்கிலேய அதிகாரிகள் அவருக்கு எவ்விதம் உதவிகரமாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.  தென்னாப்பிரிக்காவில் கலகக்காரர்களின் பிடியிலிருந்து அவர் எவ்வாறு தப்பிச் செல்கிறார் என்பதை அவர் விவரித்திருப்பது திரைப்பட பாணியில் அமைந்திருந்தது. டால்ஸ்டாயில் அவர் முதன் முதலில் அமைத்த ஆசிரமத்தைப் (பண்ணை) பற்றிய விவரங்களும் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.

அகிம்சை தான் தன் தாரக மந்திரம் என்ற தீர்மானத்துடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பும் அவர்   எவ்வாறு மக்கள் பிரச்சனைகளை கையாள்கிறார்?! மக்கள் இயக்கமாக போராட்டங்களை எவ்வாறு  மாற்றுகிறார்?!  யாரெல்லாம் இவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதையும் ஒத்துழையாமை, உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் உருவான சூழ்நிலைகளையும் கதரின் மேல் தனக்கு ஏற்பட்ட காதலையும்   விவரிக்கிறார். போராட்டத்தைக்  குறித்து முழுவதும் அறிந்து கொள்ள வேண்டுமெனில் எப்புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்றும் இடையிடையே  சிபாரிசும்  செய்கிறார். இறுதியாக  சுயராஜ்ஜியமே எங்கள் விழைவு என்ற தீர்மானம்  காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேறிய குறிப்புகளோடு 1921-ம் ஆண்டிற்குப் பிறகு தனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று கூறி  முடித்து விடுகிறார்.

இப்புத்தகத்தை வாசிக்கும் பொழுது சில சமயம் அவரின் பிடிவாதத்தை நினைத்து நமக்கு கோபம் வருகிறது. சில இடங்களில் நகைச்சுவை கலந்து அவர் எழுதியிருக்கும் சம்பவங்கள் சிரிப்பை வரவழைக்கிறது எனினும்     நான் வாசித்து ஆச்சரியப்பட்ட விஷயங்களில் சில:

1. காந்தி தன் வாழ்வில் ஒய்வின்றி செய்த பயணங்கள். கப்பல், ரெயில், மோட்டார் முடிவில் நடைப்பயணம் என்று தன் வாழ்நாளின் பெரும் பகுதியை மக்களுக்கான  பயணத்திலேயே கழித்திருக்கிறார்.

2. சுத்தத்தைப் பற்றிய சிந்தனை. சுய மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதை பற்றி புத்தகம் முழுவதுமே ஆங்காங்கே 
வலியுறுத்துகிறார்.

3. தன் கருத்துக்கள் மக்களை உடனுக்குடன் சென்று சேர வேண்டும் என்ற ஆவலினால்  இடையராமல் அவர் ஆற்றிய எழுத்துப்பணி...  பத்திரிக்கைகளுக்கு  எழுதிய கடிதங்கள்.

4. 21-ம் நூற்றாண்டில் நமக்கு அறிமுகமாகும் பல வகையான உணவு பழக்க வழக்கங்களை (Diet) பல வருடங்களுக்கு முன்பே சோதித்து பின்பற்றியது. மண் சிகிச்சை, நீர் சிகிச்சை என்று இயற்கை மருத்துவங்களை கையாண்டது.        

5. தன் கொள்கையைத் தவிர மக்கள் நலனுக்காக  எதையும் சமரசம் செய்து கொள்ள எந்நேரமும்  தயாராக இருக்கும் குணம்.

வரலாற்றில் தடம் பதித்தவர்களைப் பற்றி பிறர் எழுதிய புத்தங்கங்களை வாசிக்கும் பொழுது நம்மில்  ஏற்படும் பிரம்மிப்பு... காந்தி தன் கைப்பட மிக எளிய நடையில் எழுதிய இப்புத்தகமும் நமக்கு  ஏற்படுத்துகிறது.


காந்தியைப் பற்றி பலர் பல கருத்துக்களைக் கொண்டிருந்தாலும்... அவரை மகாத்மாவாக நினைக்காமல் ஒரு சாமானியனாக  எண்ணி இப்புத்தகத்தை ஒரு முறையேனும்  வாசித்தல் அவசியம்.  



Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog