பரியேறும் பெருமாள்

இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படைப்பான  "பரியேறும் பெருமாள்" இயக்குனர் ரஞ்சித்தின் தயாரிப்பில் , சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளிவந்திருக்கிறது. படத்தின் தலைப்பையும், போஸ்டர், டீஸர் ஆகிவற்றை பார்க்கும் போதும் படத்தின் மூலக்கதையை நம்மால்  ஓரளவு யூகிக்கிக்க முடிகிறது...நம் யூகமும் ஓரளவிற்கு சரியாகவே இருப்பினும் நம்மால் நினைத்தும் பார்க்கமுடியாத சிறு சிறு நுணுக்கங்களை திரைக்கதையில் புகுத்தி படத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்கிறார் அறிமுக இயக்குனர்.

படம் தொடங்கியதும் வரும் "கருப்பி " பாடல் மேற்கத்திய "Rap" ஸ்டைலில் எழுதி பாடியிருக்கிறார்கள். கேட்டதும் "என்ன பாட்டு இது " என்று தோன்றினாலும் பாடல் முடியும் பொழுது "நல்லா இருக்கே " என்று எண்ண வைக்கிறது.

பின்தங்கிய மக்கள் வாழும் கிராமத்தில் இருந்து சட்டக்கல்லூரியில் படிக்க வரும் மாணவனாக கதிர் கனகச்சிதம். "பரியேறும் பெருமாள் " கதாபாத்திரத்தின் மேல் அனாயசமாக  ஏறி  சிம்மாசனம் போட்டு அமருகிறார் (நம் மனதிலும் கூட !!!). கோபம், சிரிப்பு, சோகம், பயம், ஏமாற்றம், அதிர்ச்சி  என்று அனைத்து விதமான  நடிப்பையும் தத்ரூபமாக, செயற்கை தன்மை இல்லாமல் வெளிப்படுத்தி நம் கைத்தட்டலை அள்ளிச் செல்கிறார். அடுத்த விஜய் சேதுபதி இவர் தானோ?!  

"ஆனந்த்" கதாபாத்திரத்தில் யோகி பாபு அருமையாக நடித்திருக்கிறார். எதார்த்தமாக அவர் பேசும் வசனங்கள் கூட  நகைச்சுவையை கொண்டுவருகிறது. அவரின் டயலாக் டெலிவரி சூப்பர்.

 "ஜோ"- வாக வருகிறார் ஆனந்தி. குறை சொல்லமுடியாத நடிப்பு. உணர்ந்து நடித்திருக்கிறார். நல்ல தேர்வு என்றே சொல்லலாம். அழகாகவும் இருக்கிறார். நடிகை  சினேகாவை அடிக்கடி  நினைவில் கொண்டுவருகிறார் ஆனந்தி.

கதிரின் அப்பா, ஆனந்தியின் குடும்பத்தார், சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து பாத்திரங்களும் தூண்களாக படத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர். இவர்களோடு மேஸ்திரி தாத்தா நம்மை வாயடைக்கச் செய்கிறார். 

ஹீரோயிசம், பஞ்ச் டயலாக், Item Song, love  song  போன்றவற்றிற்கு வேலையே இல்லை அதற்காக "message " சொல்லியிருப்பாங்களோ?! என்று நீங்கள் பயப்படத்தேவையில்லை. பல சமூக அவலங்களை இலை மறை காய் மறையாக  நமக்கு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். புரிந்து பார்த்தால் அனைத்தும் விளங்கும்.

"இந்த மாதிரி எத்தனை படத்தை பார்த்திருப்போம்?! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்பிடியே படம் எடுப்பீங்க?! "என்று புலம்புபவர்களுக்கு - இன்றளவும் சமூக சூழ்நிலை அவ்வாறு தான் உள்ளது என்று  இயக்குனர் முகத்தில் அறைந்தது போல் சொல்லும் செய்திதான் "பரியேறும் பெருமாள் ".

 அறிவியல் தொழில் நுட்பம் என   ராக்கெட் வேகத்தில் பறக்கும் சமூகம்  மற்ற விஷயங்களில் என்னவோ  ஆமை வேகத்தில் தான்  நகருகிறது!!!  இது எப்போது மாறும் ?! அதற்கும் விடையை இயக்குனர் படத்தின் இறுதியில் கொடுத்துவிடுகிறார்.

அனைத்துத்தரப்பு மக்களும் பார்க்கவேண்டிய திரைப்படம் "பரியேறும் பெருமாள்".

Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா