கடவுள் தொடங்கிய இடம்

 அ.முத்துலிங்கம் எழுதிய "கடவுள் தொடங்கிய இடம்" என்னும் நாவலை எனது கணவரின் அறிமுகத்தின் பேரில்  சமீபத்தில் படிக்க நேர்ந்தது. 2014-ம் ஆண்டில் வெளிவந்த இப்புத்தகம் ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்திருக்கிறது.

கதையின் தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ ஆன்மீகம், சித்தாந்தம் குறித்த புத்தகமோ என்று எண்ணிவிட வேண்டாம். இனப்போர் காரணமாக பல்லாயிரம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்த விவரம் நாம் அறிந்ததே எனினும் அவர்கள் அகதி என்ற அந்த அந்ததஸ்தைப் (?) பெற  எப்படிப்பட்ட பயணத்தை மேற்கொண்டனர்  என்பதை மிக விவரமாக நமக்கு எடுத்துக் கூறும் முயற்சியே "கடவுள் தொடங்கிய இடம் " எனலாம்.

கதை மாந்தர் நிஷாந்த் 1994-ல்  யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு  எவ்வாறு, எப்போது  கனடாவை அடைந்தார், அவரைப் போல் புலம் பெயர்பவர்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு உதவும் ஏஜெண்டுகள் எவ்வாறு செயல்படுகிறார்கள்  என்பதையும்  எதார்த்தம் கலந்து எவ்வித  மிகையுமின்றி ஆசிரியர் எழுதியிருக்கிறார் அதற்காக விறுவிறுப்பில்லை என்று நினைத்து விடவேண்டாம். கதை தொடங்கியதிலிருந்து முடிவது வரை கணக்கிலடங்கா கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். இவர்கள்  எதற்காக புலம் பெயர்கிறார்கள் என்ற காரணம் எனக்கு சற்று புதிதாகவே இருந்தது. இதைப்பற்றி எனக்கிருந்த புரிதலை மாற்றி அமைத்தது. 

தன்னுடைய இந்த பயணத்தில் நிஷாந்த் பயம், அன்பு, பாசம், காதல், இரக்கம், நட்பு, பகை, வெறுப்பு, ஆச்சர்யம், நகைச்சுவை, மகிழ்ச்சி, துரோகம், நன்றி  என அனைத்து உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார். மாஸ்ரர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதை ஆசிரியர் பல்வேறு ஊக்கக் கதைகளை வரலாற்றிலிருந்தும், சமகாலத்திலிருந்தும் 
" Motivational Speech " போல கதை முழுவதும் தூவியிருப்பது மிகவும் சுவாரஸ்யமாகவும் எழுச்சி ஊட்டக்கூடியதாகவும் இருந்தது.

கதை முழுவதும் வரும் பல்வேறு பெண் கதாபாத்திரங்கள் வடிவமைப்பு  அருமை. 

நிஷாந்த் சந்திக்கும் ஒரு சில கதாபாத்திரங்களின் செய்கைகள்  இந்த இக்கட்டான கதைக்களத்தில் நகைச்சுவையை கொண்டு வருவது போல எழுதியிருப்பது கதை ஆசிரியரின் அனுபவத்தைக் காட்டுகிறது எனலாம்.

புலம் பெயர்பவர்களில் பலர் நினைத்த நாட்டிற்கு சென்று விடமாட்டோமா என்று ஏங்க "ஜெயகரன்" என்னும் கதாபாத்திரம் மட்டும்  உலக போலீசால் தேடப்படும் குற்றவாளியாக மாறுவதும்  ஆனால் அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் "இருவப்பனுக்கு ஒரு நாடு இல்லாதவனுக்கு உலகமே தன்  நாடு" என்று   "Cool "ஆக சுற்றித் திரியும் "Stylish Guy "ஆக விவரித்திருந்த விதம் வித்தியாசம்!!!

புத்தகத்தில் பல்வேறு வரிகள் என் மனத்தைக் கவர்ந்தன எனினும் கதையைத் தாங்கி நிற்கும் வரிகளில் சில ...  

"அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸின் பயணம் 71 நாள் எடுத்தது. சீனாவுக்கு போக மார்க்கோ போலோவுக்கு 3 வருடம் 6 மாதம் பிடித்தது. நிஷாந்த் கொழும்பிலிருந்து கனடா வர  5 வருடம் 2 மாதம் 8 நாட்கள் எடுத்துக் கொண்டான்"

"ஒரு நாடு முன்னேறிய நாடு என்று அறிந்து கொள்ள அவர்கள் எத்தனை 
விண் கலங்களை அனுப்பினார்கள் என்பதை வைத்தோ, எத்தனை அணுகுண்டுகள் சேகரித்திருக்கிறார்கள் என்பதை வைத்தோ அல்லது எத்தனை செல்வந்தர்கள் அந்த நாட்டில் உள்ளார்கள் என்பதை வைத்தோ கணிக்க முடியாது. அவர்கள் மனித உயிருக்கு மட்டுமல்ல, ஒரு சக உயிருக்கு என்ன மதிப்பளிக்கிறார்கள் என்பதில்தான் அது தங்கியிருக்கிறது"

"யாராவது சேலையை தண்ணீரில் முங்கி விட்டு அப்படியே கொடுத்தால் காட்டமுடியுமா?! ஒன்றும் செய்யத் தேவையில்லை...நாலு மணிநேரம் காத்திருந்தால்  தானாகவே சேலை காய்ந்துவிடும். கட்டலாம். கஷ்டங்களும் அப்படித்தான். ஓன்றுமே செய்யத் தேவையில்லை. அவை  தானாகவே அகன்றுவிடும்"   

இவர்கள் படும் அவஸ்தைகளை எல்லாம் படிக்கும் போது இரு விஷயங்கள் என் நினைவில் எழுந்த வண்ணம் இருந்தன. முதலாவது - வெளியில் சென்றால் காவலர்கள் பிடித்துக் கொள்வார்கள் என்ற நிலையில் நாளை என்ன நடக்கும் என்ற உத்திரவாதமும்  இல்லாமல் வீட்டுச் சிறையில் முன் பின் தெரியாதவர்களுடன் அடைபட்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டால்  இந்த கொரோனா தொற்றின் காரணமாக வீட்டில் சகல வசதிகளுடன் அடைபட்டிருக்கும் நம்  நிலைமை ஒன்றும் மோசமல்ல. 

இரண்டாவது - அகதிகளாக நாடற்று  புலம் பெயர முயற்சிக்கும் இவர்களுடன்  ஒப்பிடும் போது வேலை நிமித்தமாக தாயகம் விட்டு வெளிநாட்டில் பணிபுரியும் " Legal Immigrants" ஆகிய நாம் அனைத்து சுதந்திரமும் வசதியும் இருந்தும் குடியுரிமைக்காக காத்துக்கிடக்க வேண்டி அலுத்துக் கொள்வதெல்லாம் "Too Much" என்று எண்ணத் தோன்றுகிறது.

இலங்கை தமிழர்களைப் பற்றிய கதை என்பதால் கதை முழுவதையும் இலங்கைத் தமியில் எழுதாமல் அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய நடையில் எழுதியிருந்ததும் முடிவை சஸ்பென்சாக அமைத்திருந்ததும்  பாராட்டப்பட வேண்டிய அம்சங்களில் ஒன்று. 

ஆக மொத்தத்தில்  "கடவுள் தொடங்கிய இடம் " ஒரு நல்ல டாக்குமெண்டரி படம் பார்த்த திருப்தியை அளித்தது. $2 சொச்சத்திற்கு அமேசான் kindle-ல் கிடைக்கும் 300 பக்கங்கள் அடங்கிய  இப்புத்தகத்தை நேரமிருந்தால் நீங்களும் ஒரு முறை வாசிக்கலாம்.

Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Empire State #road_trip #travel_blog