Ramayan (1987 TV Series)
கடந்த மார்ச் முதல் கொரோனா- வால் உலகமே முடங்கியது... இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது அனைவரும் அறிந்ததே. இதன் விளைவாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் தற்காலிகத் தடங்கல் ஏற்பட பழைய நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் மறு ஒளிபரப்பாகத் தொடங்கின. அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் 1987-ம் ஆண்டு வெளிவந்த ராமாயணம் தொடரை ஒளிபரப்ப 77 மில்லியன் மக்களால் அது பார்க்கப்பட்டு உலக சாதனையில் இடம் பிடித்ததாக விக்கிபீடியா கூறுகிறது. அதைத் தொடர்ந்து ராமாயணம் தொடர்பான மீம்ஸ்களும், டிக் டாக் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவியதும் அதில் நடித்த நடிகர்களின் தற்போதைய நிலை என்ன?! போன்ற வீடியோக்கள் வைரல் ஆனதும் நாம் அறிந்ததே!!!
கடந்த ஆண்டுகளில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களால் தயாரிக்கப்பட்டு ராமாயணம் தொடராக வெளிவந்திருந்தாலும் (முதன் முறையாக) 33 வருடத்திற்கு முன் உருவாக்கப்பட்ட இந்த பழமையான தூர்தர்ஷன் தொடருக்கே மவுசு அதிகம் என்று நிரூபணம் ஆனது.
எனது மாமியாரும் ராமானந்த சாகரால் எழுதி இயக்கப்பட்ட இத்தொடர் வழக்கமான கதையோடு பக்தி, சித்தாந்தம் அனைத்தையும் உள்ளடக்கியது எனவும் "You Tube-ல வந்தா நீயும் பசங்களோட பாரு" என்று Recommend செய்ததால் நானும் பார்த்தேன், ரசித்தேன் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் விழைகிறேன்.
வால்மீகி மற்றும் துளசி தாசரால் எழுதப்பட்ட ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொலைக்காட்சித் தொடர் ஆறு காண்டங்களையும் விரிவாக எடுத்துரைக்கிறது முடிவில் உத்தர காண்டத்தின் அறிமுகத்தோடு நிறைவடைகிறது. ராமாயணக் கதை நம் அனைவருக்கும் தெரிந்ததே எனினும் அதில் அடங்கிய பல்வேறு சிறு சிறு நிகழ்வுகளை நாம் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு என்றே நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை ஆரண்ய காண்டத்தில் இருந்து மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ராமர், லக்ஷ்மணன் மற்றும் சீதை மூவரும் தங்கள் வன வாசத்தில் பல ரிஷிகளை சந்திக்கின்றனர். அனசூயை என்னும் ரிஷி பத்தினி பற்றிய விவரங்கள் நான் அறியாதது. சூர்ப்பனகை மூக்கு அறுபட்டு திரும்பியதும் ராவணனின் இளைய சகோதரர்கள் தலைமையில் படை வருவதும் அதை ராம, லக்ஷ்மண இணை முறியடிப்பதும் எனக்கு புதிய தகவல்.
சீதை கடத்தப்பட்டதும் வரும் கிஷ்கிந்தா காண்டத்தில் முதல் முறையாக அனுமார் மாறுவேடத்தில் அயோத்தியா குமாரர்களை சந்திப்பது ரசிக்கும் படி அமைந்திருந்தது. வாலி வதம் முடிந்ததும் சுக்ரீவன் அரசனானதும் சீதையை தேடும் முயற்சியில் ஈடுபடாமல் பொழுதைப்போக்குவதும் லக்ஷ்மணன் பொங்கி எழுவதும் அருமை. பின் வானரப்படை "எவ்வாறு சீதை ராவணனால் கடத்தப்பட்டாள்?" என்று அறிந்து கொள்வது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
என்னைக் கவர்ந்த அடுத்த பகுதி "யுத்த காண்டம்". வீபீஷணன் ராமனின் சகோதரர்களில் ஒருவராக ஆவது நாம் அறிந்ததே எனினும் அவர் எவ்வாறெல்லாம் வானர சேனைக்கு உதவுகிறார்...அதனால் கடுமையான குற்ற உணர்ச்சியால் பரிதவிக்கிறார் என்பதெல்லாம் மிக அழகாக படமாக்கியிருக்கிறார்கள். இராவணன் செய்வது தவறு...தவறு என்று யாரெல்லாம் எடுத்துக் கூறுகிறார்கள்?! இத்தொடரைப் பார்த்தால் மிக விவரமாக அறிந்து கொள்ளலாம். ராவணனின் புத்திரன் இந்திரஜித் நமக்குத் தெரியும். மீதமுள்ள ஆறு பேரைப்பற்றித் தெரியுமா?! கும்பகர்ணன் ஏன் தூங்குகிறான்?!போருக்கு எந்த மனநிலையுடன் சென்றான்?! அனைத்தும் மிக விலாவாரியாகக் படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர் நடிகையரின் நடிப்பு, Settings, கிராபிக்ஸ் மற்றும் பாடல்கள் போன்றவை தொடக்கத்தில் நமக்கு சற்று அந்நியமாகப் பட்டாலும் பத்து எபிசோடுக்குள் பழகி விடுகிறது. நடிகர்கள் அனைவரும் தம் தம் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் எனலாம். சீதை தான் பொறுமைசாலி என்றால் ராமர் "எதற்கும் கலங்காமல் நடுநிலையாக எப்போதும்" எப்படித்தான் முடியும் என்று எண்ணத்தோன்றுகிறது. நம்முள் தோன்றும் அனைத்து எமோஷன்களையும் லக்ஷ்மணன் திரையில் கொண்டு வருகிறார்.
ராவணனை முதலில் பார்த்ததும் வயதான மாதிரி இருக்கிறாரே?! என்று தோன்றினாலும் மிக நன்றாக நடித்திருக்கிறார். ஆங்காங்கு சற்று மெதுவாகச் செல்வது போலத் தோன்றினாலும் மிக விரைவாகவே அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று விடுகிறது தொடர்.
சுயம்வரத்தில் நாணை வளைத்து வில்லை உடைக்கும் ராமனை கோபத்துடன் எதிர்கொள்ள வருகிறார் பரசுராமர்.... ஏன்?!
அசோகவனத்தில் சிறை பட்டிருக்கும் சீதைக்கு ஆறுதலாகத் தாயைப் போல் இருக்கும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த காவலாளிப் பெண்ணின் பெயர் திரிசடை. தெரியுமா உங்களுக்கு?!
இதைப் போன்று பல்வேறு விவரங்கள் நிறைந்திருக்கும் 78 எபிசோடுகள் அடங்கிய இத்தொடரை YouTube-ல் English Caption-னோடு காணக்கிடைப்பதால் குழந்தைகளோடு கண்டு ரசிக்கலாம். 12 வயதாகிய என் மகள் மிகவும் ஆர்வத்தோடு கண்டு களித்தாள் என்பது கூடுதல் தகவல்.
பின்குறிப்பு : நான் இதுவரை ராமாயணத்தை புத்தக வடிவில் வாசித்தது கிடையாது.
Comments
Post a Comment