நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி - 3
அப்பாடா ஒரு யூத மன்னன் வந்துட்டாரு என்று நிம்மதி பெரு மூச்சு விடும் வேளையில் ஆசிரியர் "காட்டரபிகளாக சிதறிக்கிடந்த நாலாயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்களை இஸ்லாம் என்ற மதத்தின் கீழ் ஒருங்கிணைத்து அவர்களுக்கென்று ஓர் சரித்திரத்தை உருவாகித் தந்த முகமது நபியின் பிறப்பு மற்றும் அவர் தன்னை தேவ தூதராக எவ்வாறு உணர ஆரம்பித்தார் அவரையும் மக்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தினர்" என்று மிக விரிவாகக் கூறுகிறார். படிப்பதற்கு சுவாரசியமாக பல அறியாத விஷயங்களை ஆதாரப் பூர்வமாக முன் வைக்கிறார்.
இஸ்லாம் மிக வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த கால கட்டத்தில் எல்லாம் யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எந்த பிணக்கும் இல்லை. காலம் செல்லச் செல்ல யூதர்கள், இஸ்லாமியர்களுக்கு தாங்கள் அளித்த வாக்குப்படி உதவ மறுத்தனர், முகமது நபியை இறை தூதராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர். முகமதுவோ யூதர்களின் மத, பழக்க வழக்கங்களில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை விமரிசிக்க.. ஆரம்பமான பிரச்சனை முகமது நபி இஸ்லாமியர்களை மெக்கா நோக்கி தொழச் செய்த போது பூதாகரமாக வெடித்தது.
கலீஃபா ஆன முகமது நபி மதத்தோடு நாட்டையும் விஸ்தரிக்க ஆரம்பித்தார் ஆனால் அவரின் எளிமையை ஆசிரியர் தெள்ளத்தெளிவாக நமக்கு உணர்த்துகிறார். நாம் அனைவரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
அவருக்குப் பின் வந்த அபூ பக்கர் குர் ரானை நூலகத் தொகுத்தார். அவருக்கு பிறகு வந்த உமரின் ஆட்சிக்காலம் தான் இஸ்லாமின் பொற்காலமாக அறியப்படுகிறது. ஜெருசலேத்தில் கால் வைத்த முதல் இஸ்லாமியரும் அவரே!!!
எகிப்தை வென்ற உமர் மிகவும் எளிமையானவர். அங்கு வாழ்ந்த மக்களின் மத நம்பிக்கையை மதித்தாரே தவிர இஸ்லாத்தை திணிக்கவில்லை. பாலஸ்தீனில் வாழ்ந்த யூதர்கள் கூட இவரின் ஆட்சியில் மிக நிம்மதியாக வாழ்ந்ததாக பல் வேறு ஆதாரங்களை நம் முன் வைக்கிறார் ஆசிரியர். இவ்வாறாக கலீபாக்களின் ஆட்சி காலத்தில் அனைவரும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்தார்கள் என்பதைக் கேட்கும் போது நமக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
இவ்வாறு பல்வேறு சரித்திர நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே செல்லும் ஆசிரியர் கி.பி.1095-ம் ஆண்டு போப்பாண்டவரால் இஸ்லாத்தை அழிக்கவும் கிருத்துவத்தை பரப்பவும், ஜெருசலேத்தை கைப்பற்றவும் ஆரம்பிக்கப்பட்ட, நாம் அனைவரும் பாட புத்தகத்தில் படித்த, கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் நடந்த சிலுவைப் போரைப் பற்றி குறிப்பிடுகிறார்.
எந்த தரப்பிற்கும் எவ்வித லாபமும் இல்லாமல் முடிந்த இந்த சிலுவைப்போரில் தங்களுக்கு தோள் கொடுத்து உதவாமல் நாட்டை விட்டு வெளியேறிய யூதர்களின் மேல் இஸ்லாமியர்களுக்கு வெறுப்பு பன் மடங்காக உயர்ந்ததில் வியப்பொன்றும் இல்லையே?
தொடரும்..
Comments
Post a Comment