ஜெய் பீம்
"ஜெய் பீம்" திரைப்படம் அமேசான் பிரைமில் வெளிவந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டிருந்தாலும் பல பேர் இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் சேர்த்து விட்டிருந்தாலும், இதன் மேல் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு பிரபலமடைந்திருந்தும் படத்தைப் பார்ப்பதற்கு ஏனோ வித தயக்கம். படத்தின் கதையை ஓரளவு நாம் அறிந்திருப்பதும் கதைக்களத்தை மனதில் கொண்டு அதில் வரவிருக்கும் காட்சிகளை நாம் யூகித்திருப்பதும் தான் நமது தயக்கத்திற்கு காரணம் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு "படத்தின் வெகு சில காட்சிகளை Forward செய்து விட்டீர்களானால் நீங்கள் தாராளமாக பார்க்கலாம்" என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கர்ணன் திரைப்படத்தைத் தொடர்ந்து உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நம் முன் கொண்டு வந்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் "ஜெய் பீம்".
காலம் காலமாக சாதீய வன்கொடுமை, அத்து மீறல்கள் பற்றிய திரைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது உதாரணமாக பாரதிராஜா தனது கிராமத்திய படங்களில் பின்னணியில் காட்டியிருப்பார் ஆனால் முன்னணியில் செல்லும் காதல் கதை தான் நம் மனதில் நிற்கும் ஆனால் இப்பொது நிலை மாறியிருக்கிறது. மக்களுக்கு இம்மாதிரியான படங்களை கிரகித்துக் கொள்ளும் பக்குவம் வந்து விட்டதா இல்லை இயக்குனர்களுக்கு தைரியம் வந்துவிட்டதா? தெரியவில்லை!!!
படத்தைப் பார்ப்பதற்கு முன் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் பாதிப் படம் முடிந்ததும் தான் வருவார் என்ற எண்ணத்துடன் இருந்தேன் ஆனால் அவர் தான் ஹீரோ என்று நினைத்திருக்கவில்லை. மிகவும் Convincing ஆக நடித்திருக்கிறார். நெடு நாட்களுக்குப் பிறகு "Court Room Drama" என்று வருணிக்க கூடிய காட்சி அமைப்புகள் ஆனால் நீண்ட நெடிய வசனங்கள் எல்லாம் இல்லை. நச்சென்று இருந்தது வாதங்கள். சூர்யாவின் Career-ல் நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் அவர் பெயர் சொல்லக் கூடிய படங்களில் ஒன்று "ஜெய் பீம்"
மணிகண்டனை பல்வேறு படங்களில் சங்கோசப்படும் இளைஞனாக, பார்த்தாலே பரிதாபம் தோன்றும் கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம் இதிலும் அதே சாயல் உள்ள ரோல் தான் ஆனால் ஒரு படி மேலே சென்று நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறார். இவரின் பன் முகத்திறமையை அறிந்து கொள்ள கூகிள் செய்து பாருங்களேன்.
செங்கேணி ஆக வரும் லிஜோ மோல் கலக்கி இருக்கிறார். கதையே அவரின் மீது தான் பயணிக்கிறது.
இதில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பை விமர்சிக்க தொடங்கினால் இந்த கட்டுரையையே அது நிறைத்து விடும். பல்வேறு திறமை மிக்க நடிகர்கள் ஓரிரு காட்சிகளில் வந்து போக புது முகங்கள் முத்திரை பதிக்கிறார்கள்.
டீச்சராக வரும் ரஜிஷா, மணிகண்டனின் அக்காவாக வருபவர், லாக்கப் காட்சிகள் என பல விஷயங்கள் கர்ணன் திரைப்படத்தை நியாபகப் படுத்தினாலும் தனது சிறப்பான கதை அம்சத்தால் தனித்துவத்தை பெற்று நமது மனதில் நிற்கிறது 'ஜெய் பீம்".
1995-ல் கதைக்களம் அமைந்திருப்பதால் அதை தெரியப்படுத்தும் படி கட் அவுட்களும் போஸ்டர்களையும் ஆங்காங்கே காட்டி இருக்கும் இயக்குனர் ஞானவேல் அனைத்து காட்சிகளையும் தொய்வில்லாமல் முன் பின்னாக சென்று மிக அழகாக விவரித்துக் கொண்டே செல்கிறார் இயக்குனர் உதாரணமாக ரைஸ் மில் ஓனர், கேரள டீ கடைக்காரர் மற்றும் சேட்டின் வாக்கு மூலங்கள்.
தங்கள் தவறை மறைக்க காவல் துறை பல்வேறு தகிடு தத்தங்களை புரிவதாக படத்தில் காட்டப்படுகிறது ஆனால் படம் பார்க்கும் நமக்கு "இத ஈஸியா கண்டுபிடிச்சுருவாங்களே" "இங்க தடயத்தை விட்டுட்டு போறாங்களே" என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. சரி அதையெல்லாம் வழக்கை திசை திருப்ப அவர்கள் செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கடைசியாக சூர்யா நீதிபதியிடம் கால அவகாசம் வாங்கிக் கொண்டு சரியான பாதையில் செல்லும் போது கூட காவல்துறையோ அரசு தரப்பு வழக்கறிஞர்களோ ஏன் எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்?
அதிகார வர்கங்கள் மட்டுமல்ல அடுத்த வீட்டில் இருப்பவர்கள் கூட சாதீய பார்வை இன்றி மற்றவர்களை பார்ப்பதில்லை என்பதை பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டிக் கொண்டே செல்லும் இயக்குனர் "இவர்களைப் போன்ற மக்களுக்காக தெருவில் இறங்கி நீங்கள் கொடி பிடிக்காவிட்டாலும் அவர்களை சுதந்திரமாக உங்கள் தெருக்களில் வாழ விடுங்கள் அதுவே போதும் என்று கூறுவது போல இருந்தது "ஜெய் பீம்" திரைப்படம்.
பின் குறிப்பு : வெற்றி மாறனின் "விசாரணை" திரைப்படத்தையும் மேற் கூறிய காரணங்களுக்காகவே நான் பார்க்காமல் விட்டேன்..பார்த்தவர்கள் சொல்லுங்களேன்..பார்க்கலாமா என்று?
Comments
Post a Comment