சுழல் - The Vortex
கடந்த வருடம் அமேசான் Prime - ல் வெளிவந்த குறுந்தொடர்களில் ஒன்று 'சுழல் - The Vortex". பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், இளங்கோ என்று நடிகர் பட்டாளங்களை முன்னிறுத்தி "புஷ்கர்- காயத்ரி" எழுதிய கதையை "பிரம்மா- அனுசரண் முருகையன்" இயக்கியிருக்கிறார்கள்.
சாம்பலுர் என்னும் கிராமத்தில் ஒரே ஒரு சிமெண்ட் தொழிற்சாலை தான் அனைவரின் வாழ்வாதாரம். அங்கு தொழிலார்களுக்கும் முதலாளிக்கும் இடையே பிரச்சனை..தலைமை தாங்கி போராட்டத்தை நடத்துகிறார் யூனியன் தலைவர் ஷண்முகம் (பார்த்திபன்). அந்த ஊரின் காவல்துறை (ஸ்ரேயா மற்றும் கதிர்) பண முதலைகளின் பக்கம் நிற்கிறது.
சாம்பாலூரில் மயான கொள்ளை திருவிழா தொடங்குகிறது. அதே நாளில் தொழிற்சாலையில் தீ பிடிக்கிறது. இந்த களேபரங்களுக்கு இடையே சண்முகத்தின் மகள் நிலா காணாமல் போகிறாள்.
மேல்கூறிய பிரச்சனைகளில் சுழலை ஒவ்வொன்றாக களைந்து சீர்படுத்துகிறார்கள் 8-வது எபிசோடில் முடிவில்.
நிலா கடத்தப்பட்டிருக்கிறாள் என்று கதிர் கண்டறிவதும் அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது. திடீரென்று நிலாவின் பிணம் ஏரியில் கிடைப்பதும் அதனைத் தொடர்ந்து அடுக்கடுக்காக காட்டப்படும் சம்பவங்களும் முதலில் நம்முடைய ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தாலும் நம் பொறுமையை நன்றாகவே சோதிக்கிறது.
போலீஸ் சந்தேகப்படும் பாத்திரங்கள் குற்றவாளிகளாக இருக்க மாட்டார்கள் என்று ஏனோ நம்மால் ஈசியாக சொல்லிவிட முடிகிறது.
தொழிற்சாலை தீ விபத்தை துப்பறியும் சந்தானபாரதி பாத்திரம் அருமை!!!
ஒளிப்பதிவாளர் முகேஸ்வரன் மலைப்பிரதேசத்தில் அழகையும், ஊர் திருவிழாவின் அலங்காரங்களையும், மனித உணர்ச்சிகளையும் மிக அழகாக பல்வேறு கோணங்களில் சுழன்று சுழன்று படமாக்கி அசத்தியிருக்கிறார்.
காட்சிகள் வேகம் குறையாமல் சென்றாலும் Web Series களுக்கே உண்டான தொய்வு வரத்தான் செய்கிறது. அளவுக்கு அதிகமான Topic களை பிரச்சனைகளின் பட்டியலில் சேர்த்து விட்டார்களோ என்று எண்ணச்செய்து விட்டது இந்தச் 'சுழல் - The Vortex".
பார்த்திபனுக்கு அளவாக நடிக்க வேண்டிய கட்டாயம். அவருடைய குண்டக்க மண்டக்க பேச்சுகளுக்கு இடமில்லை. ஷ்ரேயா மற்றும் ஐஸ்வர்யாவின் நடிப்பு போகப்போக சலிப்பைக் கொடுக்கிறது.
மொத்தத்தில் நேரமிருந்தால் தாராளமாக பார்க்கலாம். குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கவும். வயதானவர்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை.
Comments
Post a Comment