நாயகன் (1987)
அனைவராலும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படும் சரித்திரப்படமான பொன்னியின் செல்வன் -2 வரும் ஏப்ரல் 28-ம் நாள் உலகெங்கும் வெளிவர இருக்கும் இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் 35 வருடங்களுக்கு முன் வெளிவந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த "நாயகன்" திரைப்படத்தைப் பற்றி எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே நாயகன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்து வந்திருக்கிறேனே தவிர முழுப்படத்தையும் கவனமாக பார்த்ததில்லை ஏனோ (இளவயதில்) பார்க்கத் தோன்றவும் இல்லை.
"மணிரத்னம் படத்துக்கு கூட்டிட்டு போனாலே (காட்சிகள் இருட்டாக இருப்பதால்) பசங்களுக்கு காச்சல் வந்துருது" என்ற எனது அம்மாவின் கமெண்ட் காரணமாகவும் இருக்கலாம் 😆
நாயகன் படம் என்றாலே "நீங்க நல்லவரா? கெட்டவரா?", "அவங்கள நிறுத்த சொல்லு நானும் நிறுத்துறேன்", "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல" ", Mera Baba Mar Gaya" போன்ற famous வசனங்களும் கமலும் இளையராஜாவும் கரகர குரலில் கண்ணீரை வரவழைக்கும் வண்ணம் பாடி இருக்கும் "தென்பாண்டிச் சீமையிலே" பாடலும் நம் நினைவில் வராமல் இருக்க முடியாது.
அதோடு படத்தைப் பார்க்கும் போது இத்திரைப்படத்தை வைத்து பலரும் செய்திருக்கும் நகைச்சுவைகளும் Troll களும் Meme -களும் என் மனதின் பின் புறம் ஓடிக்கொண்டே இருந்தது.
KGF ஹீரோ போலவே கமலும் தனது பெற்றோர் ஒருவரின் மரணத்திற்குப் பின் மும்பைக்கு ஓடி வருகிறார். அவரைப் போலவே முஸ்லீம் ஒருவரின் அரவணைப்பில் வளருகிறார். போலீசை தாக்குவதின் மூலம் அனைவரின் கவனத்தையும் கவரும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக நீதிக்கு புறம்பான காரியங்களில் ஈடுபட வேண்டியதாகி Don ஆக உருவெடுக்கிறார்.
இயக்குனர் மணிரத்னம் தனது கதாநாயகன் ஏன் காலப்போக்கில் திருந்த முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஆரம்ப கட்டத்தில் இருந்தே Scene By Scene ஆக சொல்லிக் கொண்டே வருகிறார்.
படத்தில் நகைசுவை காட்சிகள் இல்லை, பெரிதாக காதல் காட்சிகள் இல்லை. திரைக்கதை நேர்கோட்டில் சென்று கொண்டே இருக்கிறது இருந்தும் நம்மால் வர விருக்கும் காட்சிகளை ஊகிக்க முடியவில்லை ஏனென்றால் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. பல்வேறு காட்சிகளின் தொகுப்பே படத்தை தூக்கி நிறுத்துகிறது. சற்றும் Bore அடிக்காமல் பாடல்கள் வந்த வண்ணமே உள்ளன.
சில காலங்களுக்குப் பிறகு, 20 வருடங்களுக்குப் பிறகு என்றெல்லாம் Captions கொடுக்காமல் "கமலின் தோற்றத்தை படிப்படியாக மாற்றிக் கொண்டே வருவதோடு மட்டுமல்லாமல் அவரைச் சூழ்ந்து வரும் கதாபாத்திரங்களும் நம் கண் முன்னே மாறுவதில் இருந்தும்" "படத்தின் தொடக்கத்தில் கமலை பேர் சொல்லி ஒருமையில் அழைக்கும் ஜனகராஜ் இறுதியில் "நாயகரே" என்று மரியாதையுடன் அழைப்பதில் இருந்தும்" "தனி ஒருவனாக நின்று எதிரிகளை அடித்து துவைத்துக் கொண்டிருந்த நாயகன் தனது மனைவியின் இறப்பிற்கு வீட்டில் இருந்தபடியே எப்படி பழி வாங்குகிறார் என்று காட்டுவதில் இருந்தும் " கால மாற்றத்தை நமக்கு உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் கமலின் "Stature" எவ்வாறு படிப்படியாக உயர்கிறது என்பதையும் சொல்லாமல் சொல்லி விடுகிறார் இயக்குனர் மணிரத்னம்.
குங்குமப்பொட்டு, வெற்றிலை போடும் பழக்கம் எல்லாம் நாயகனுக்கு ஒரே நாளில் வந்து விடவில்லை என்பதை பல்வேறு காட்சிகளின் மூலம் உறுதி படுத்துகிறார் இயக்குனர்.
பாயசத்தில் வரும் முந்திரிப்பருப்பு திராட்சைப் பழங்களை போல இனிய குழந்தை கதாபாத்திரங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பாத்திரத் தேர்வு கன கச்சிதம்.
படத்திற்கு பின்னணி இசை பல இடங்களில் இல்லை என்றே கூறலாம் இருந்தும் இளையராஜாவின் பாடல்கள் இல்லையேல் நம்மால் படத்தை இத்தனை ஈடுபாட்டோடு பார்த்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. படத்தின் ஓட்டத்தோடு நம்மை இணைக்க உதவுகிறது அவரின் காலம் கடந்த இன்னிசை.
கமலின் நடிப்பை நாம் விமர்சனம் செய்ய முடியுமா என்ன?
"துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் தான் சாவான்" என்ற நீதியையும் "விரிந்து பரந்து கிளைகள் விட்ட எந்த மரமும் விதைகளை விட்டு வைக்காமல் அழிவதில்லை" என்ற எதார்தத்தையும் கிளைமாக்ஸில் சொல்லாமல் சொல்லி முடிகிறது நாயகன் திரைப்படம்.
"Cult Movie" என்ற அந்தஸ்தை பெற்ற நாயகன் படத்தை நீங்கள் இதுவரை பார்த்ததில்லை என்றால் அவசியம் பாருங்கள். பார்த்திருந்தால் உங்களின் அனுபவங்களையும் நினைவுகளையும் கமெண்டில் பதிவிடுங்கள்.
பின் குறிப்பு - காதிற்கு கேட்கா வண்ணம் பேசப்படும் மணிரத்னத்தின் Trade Mark குசுகுசு வசனங்கள் இப்படத்தில் இல்லை!!!
Comments
Post a Comment