ஒரு புளியமரத்தின் கதை - புத்தக விமர்சனம்
தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமியின் படைப்புகளில் நான் வாசித்த முதல் புத்தகம் "ஒரு புளியமரத்தின் கதை". 1966-ல் வெளிவந்திருக்கும் இந்நாவல் தான் அவரின் முதல் படைப்பும் கூட!!!
நான் காற்று வாக்கில் இப்புத்தகத்தைப் பற்றியும் அதன் ஆசிரியரைப் பற்றியும் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்திலும் சிலமுறை வாசித்திருக்கிறேன் எனினும் அவரின் கதைகள் எதையும் வாசிக்கும் வாய்ப்பு இதுவரையிலும் அமையவில்லை.
இப்புத்தகத்தை கையில் எடுக்கும் முன் கதை இப்படி இருக்கும் என்று என் மனதில் ஒரு சித்திரத்தை வரைந்து வைத்திருந்தேன் ஆனால் அதை முற்றிலும் தவிடுபொடி ஆகிவிட்டது இந்நாவல் என்று சொன்னால் மிகை ஆகாது.
ஆசிரியர் தன்னுடைய கோணத்தில் இருந்தே இக்கதையை சொல்லிக்கொண்டு வருகிறார். வாழ்வில் அவர் சந்தித்த, சிலாகித்த மனிதர்களை பின்புலத்திலும் புளியமரத்தை முன் புலத்திலும் கொண்டு கதையை நகர்த்துகிறார்.
தொடக்கத்தில் நாகர்கோவில் வட்டார வழக்கை வாசிக்க எனக்கு சிரமமாக இருந்தது தான் எனினும் கதையின் விறுவிறுப்பு அதை ஒரு பொருட்டாக நினைக்க விடவில்லை. முதல் 6,7 பகுதிகள் (Chapters) சற்று சலிப்பைத் தந்தாலும் "அப்துல் காதர், தாமு," போன்ற கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்குப் பின் புத்தகத்தை கீழே வைக்கத் தோன்றவில்லை.
அங்கங்கே அவர் புகுத்தியிருக்கு நகைச்சுவை சற்றும் மிகைத்தன்மை இல்லாமல் கதையோடு ஒன்றி வாசிக்கும் நம் முகத்தில் குறுநகைப்பை வரவழைக்கத் தவறவில்லை.
1966-ம் ஆண்டு - கிட்டத்தட்ட 57 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவல் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்துமா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆம் இன்றைய காலகட்டத்திற்கும் கச்சிதமாக பொருந்துவதால்தான் காலம் கடந்தும் நிற்கிறது "ஒரு புளியமரத்தின் கதை". இதை சொல்கையில் இப்புத்தகத்தை நினைத்து பெருமை கொள்வதா? நம் சூழல் இன்றும் மாறவில்லை என்று நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை!!!
"கடலை தாத்தா" என்ற கதாபாத்திரம் யோகிபாபுவின் "மண்டேலா" திரைப்படத்தை நினைவிற்கு கொண்டுவந்தது.
சிவனே என்று நின்றிருக்கும் ஒரு புளியமரம் அவ்வூரில் வாழும் அனைத்து தட்டு மக்களின் வாழ்க்கையை பாரபட்சமின்றி எவ்வண்ணம் வடிவமைக்கிறது அல்லது அவ்வாறு மனிதர்கள் தான் எண்ணிக்கொள்கிறார்களா? என்பதை மிக நேர்த்தியாக அதே சமயம் எளிய வர்ணனைகளின் மூலம் சொல்லிச் செல்கிறது " ஒரு புளியமரத்தின் கதை"
பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இந்நாவலை வாசித்திருப்பின் தங்களுடைய அனுபவங்களையும் கமெண்டில் பதிவிடுங்கள். சுந்தர ராமசாமியின் வேறு சில படைப்புகளையும் வாசகியான எனக்கு பரிந்துரையுங்கள்.
இன்று நம்மிடையே எழுத்தாளர் சுந்தர ராமசாமி இல்லை எனினும் அவருடைய படைப்புக்களால் நம்முடன் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஒரு புளிய மரத்தின் கதை - இது கதையல்ல நிகழ்வுகளில் தொகுப்பு!!!
பின் குறிப்பு - அமேசானில் $2.17 -ற்கு கிடைக்கிறது ஒரு புளியமரத்தின் கதை புத்தகம்.
Comments
Post a Comment