மாமன்னன் - என் எண்ணம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, Fahadh பாசில் நடிப்பில் கடந்த ஜூன் இறுதியில் திரைக்கு வந்த "மாமன்னன்" திரைப்படம் ஒரு மாதம் கழித்து OTT-ல் வெளிவந்துள்ளது.
இயக்குனரின் முந்தைய திரைப்படங்களான "பரியேறும் பெருமாள்" "கர்ணன்" போன்றே சாதி வன்மத்தைக் கண்டிக்கும் திரைப்படமாகவே "மாமன்னன்" படத்தின் கதைக் களமும் இருக்கும் என்பதை படத்தின் ப்ரோமோ, டீசரை வைத்தே நாம் ஊகித்தோம் எனினும் படத்தை பார்க்கும் ஆர்வம் நம் அனைவருக்கும் இருந்தது என்பதை மறுக்க இயலாது.
வழக்கம் போலவே மனதில் ஒரு சிறு பயத்துடன் தான் படத்தை பார்க்கத் துவங்கினோம். எதிர்பார்த்தது போலவே வன்முறைக் காட்சிகள் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வந்து விட்டது.
ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு படத்தை தொடர்ந்தோம் ஆனால் அடுத்த பாதி ஓரளவிற்கு அமைதியாகவே சென்றது எனினும் எங்களுக்கு தான் "திக் திக்" என்றே இருந்தது.
படத்திற்கு கதை என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை ஆனால் வலுவான காட்சிகளைக் கொண்டு திரைப்படத்தை கட்டமைத்து முன் நகர்த்துகிறார் இயக்குனர்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போதும் அவர்களுக்கென்று ஒரு காட்சியை அமைத்து அவர்களின் குணாதிசியங்களை நமக்கு உணர்த்தி விடுகிறார்.
வந்த காட்சிகளே "Repeat" Mode-ல் வருவது போல தோன்றினாலும் பெரிதாக தொய்வில்லை.
நாய், பன்றி, குதிரை என்று பல்வேறு விலங்கினங்களைக் கொண்டு அவர் சொல்லவரும் கருத்துக்களை எல்லாம் நம்மால் 100% Decode செய்ய முடிந்தால் அதுவே படத்திற்கு கிடைக்கும் வெற்றி!!!
"மாமன்னன்" ஒரு இயக்குனரின் படம் அதனால் நடிகர்களின் நடிப்புத் திறனை பாராட்டி பேச எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
அனைவரும் கூறுவது போல வடிவேலுவிற்கு இது ஒரு "Come Back" படம் தான் எனினும் தேவர் மகன் படத்திலேயே குணசித்திர நடிகராக தன்னுடைய நடிப்புத்திறனை வெளிப்படுத்தியவர் அவர் என்பதை மறக்க வேண்டியதில்லை!!
படத்திற்கு இசை ARR என்பதை எங்கும் நினைவிற்கு வராத வண்ணம் இசை அமைத்திருப்பது இசைப்புயலின் அபார சாதனை.
ஒளிப்பதிவு தேனீ ஈஸ்வர் - பல இடங்களில்ம நம்மை கவர்கிறார். மலை உச்சியிலிருந்து கிராமத்தை காட்டும் angles அருமை.
மாரி செல்வராஜின் முந்தைய கதாநாயகன்களான "கதிர்" "தனுஷ்" ஐ போல உதயநிதி இந்த Tailor Made பாத்திரத்தில் கச்சிதமாக அமர்கிறாரா?! அவருடைய அரசியல் பின்னணி அதற்கு தடையாக இருக்கிறதா? இதை அலச தனிக் கட்டுரை எழுத வேண்டும்.
பஹத் பாசில், லால் போன்ற மலையாள நடிகர்களின் மலையாளம் கலந்த தமிழ் சற்று நெருடலாக இருந்தது. தவிர்த்திருக்கலாம்.
இந்த சமூகத்தில் சாதி, இன, நிற பேதங்களால் நாம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறோமா அதே அளவிற்கு இந்த திரைப்படம் உங்களைக் கவரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
காதல், நகைச்சுவை போன்ற இதர விஷயங்களை கலந்து கதையின் சாரத்தை நீர்த்து போகச் செய்யாமல் மாரி செல்வராஜ் கொடுத்திருக்கும் "மாமன்னன்" திரைப்படம் பால், சர்க்கரை இல்லாத திடமான தேநீர்!!
குழந்தைகளுடன் பார்ப்பதற்கு உகந்த படம் அல்ல. நீங்கள் இதுவரை பார்க்கவில்லை எனில் படத்தின் காட்சிகளை Youtube-ல் பார்ப்பதை தவிர்த்து முழுப்படத்தையும் Netflix-ல் கண்டு களிக்கவும்.
பின் குறிப்பு - நான் இதுவரை இப்படத்தைக் குறித்த விமர்சனம் எதையும் பார்க்கவில்லை.
Comments
Post a Comment