வெண்முரசு - மகாபாரதம் நாவல் வடிவில் - எழுத்தாளர் ஜெயமோகன்

இதிகாசமான மகாபாரத்தை பற்றி அறியாதவர்கள் பரந்துபட்ட இந்த பாரத தேசத்தில் எவரும் இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இதன் ஒரு வரி சாராம்சம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். விரிவான கதையை புத்தகங்கள் மூலமும் என்னைப் போன்றோர் தூர்தர்ஷன் தொடர் மூலமும் இன்றைய தலைமுறையினர் விஜய் டீவி தொடர் வழியாகவும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மகாபாரதம் என்பதே பல்வேறு கிளைக்கதைகளும் வேறுபட்ட கதைமாந்தர்களும்  அடங்கிய கருவூலம் என்று  பலர் கூறி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இன்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 26 புத்தகங்கள் அடங்கிய 25,000 பக்கங்கங்களை வாசித்து முடித்துவிட்ட நிலையில் அதை முழுமையாக ஏற்கிறேன். உலகிலேயே மிகப் பெரிய நாவல் வரிசை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இத்தொடரை முடிக்க 8 வருடங்கள் தேவைப்பட்டது எனக்கு!!! (தொடர்ச்சியாக வாசித்திருந்தால் விரைவில் முடித்திருந்திருக்கலாம் )

2014-ம் வருடம் இவ்வரிசையின் முதல் புத்தகமான "முதற்கனல்" வெளிவந்ததுமே எனது கணவர் வாங்கி விட்டார் எனினும் நான் அதற்கு அடுத்த வருடமே அதைக் கையில் எடுக்கத் துணிந்தேன் ஏனென்றால் மிக எளிய நடையில்  எழுதப்பட்ட எந்த மகாபாரத  புத்தகத்தையும் நான் படித்ததில்லை என்றிருக்கையில்  எடுத்த எடுப்பிலேயே பிரம்மாண்டத்தில் இறங்குவதா?! என்ற தயக்கம் இருந்தது ஆனால் ஏதோ ஒரு தைரியத்தில் ஆரம்பித்து விட்டேன்.

முதல் இரண்டு மூன்று புத்தங்களை விறுவிறு என்று முடித்து விட்டேன் எனினும் "நீலம்" எனது வாசிப்பு வேகத்தை பன் மடங்கு குறைத்து விட்டது. இத்தொடரின் 26 புத்தகங்களும் ஆசிரியரின் வலைதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது அதனால்  தொலைபேசியில் எங்கும் எப்பொழுதும் வாசிக்க முடிந்தது.




தோண்டத்  தோண்டக் கிடைக்கும் புதையல் போல எழுத்தாளர் எழுதிக் குவித்துக் கொண்டே இருந்தார் அவரின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை ஆனால் அவரோ இதை ஒரு தவம் போல இயற்றிக் கொண்டிருக்கிறார் என்று பின்னாளில்  சக வாசகர்கள் சொல்லக் கேள்விப்பட்டேன்.

மகாபாரதத்தின் விரிவான கதை எனக்கு பரிச்சயம் இல்லாததால் பிரம்மாவிலிருந்து தொடங்கி மரீசி, அத்ரி, நகுஷன்.. என்று ஆசிரியர் ஆரம்பிக்கும் அனைத்து குலக்கதைகளும் எனக்கு ஆர்வமாகவே இருந்தது. இக்காப்பியத்தில் இல்லாத உணர்வுகளே இல்லை என்பதையும் தாண்டி நம்முடைய நடைமுறை வாழ்க்கையிலும் இக்கதையை இணைத்துப் பார்க்கத் தூண்டும் வண்ணம் இருந்தது ஜெயமோகனின் எழுத்தாற்றல்.. நானும் சில சமயம் கதை மாந்தர்கள் கூறும் பதிலையோ, அறிவுரையையோ, தத்துவங்களையோ  எனது சூழலுக்கும் பொருந்தும் விதமாகக் கூறிவிடுவேன் ..ஜெயமோகன் இத தானே சொல்லறாரு என்று சேர்த்துவிடுவேன்!!!



ஆசிரியர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உளவியல் ரீதியாக அலசும் விதம் அடுத்தவர்களைக் குறித்த ஏன் நம்மைப் பற்றிய நமது கண்ணோட்டத்தையே  சற்றே மாற்றி அமைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒவ்வொரு புத்தகமும் அட்டை To அட்டை சுவாரஸ்யமாகவே இருந்தது என்று சொல்ல மாட்டேன். சில நேரங்களில் "ரொம்பவே நம்ம பொறுமையை சோதிக்கிறாரே" என்று தோன்றும் ஆனால் அடுத்த அத்யாயத்தையே விறுவிறுப்பாக மாற்றி விடுவார்.




தத்துவம், சித்தாந்தம், வேதாந்தம், புராணக் கதைகள் அடங்கிய மூலக்கதையைத்  தாண்டி சோதிடம், வானவியல் சாஸ்திரம், தொலை நோக்கு ஆடிகள் செயல்படும் விதத்தை விளக்கும் அறிவியல், மற்போர், கதைப்போர் வில் வித்தையின் நுணுக்கங்கள், போர் என்றால் எவ்வாறு நடக்கும், எதன் அடிப்படையில் படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள், பாரத தேசத்தின் அப்போதைய  நில அமைப்பு (Geography), தூர தேசங்களோடும் அதன் பிரஜைகளோடும் பாரதத்தின் உறவு.

ஒரு அரண்மனை என்றால் அதன் அமைப்பு எவ்வாறிருக்கும்? அதை சுற்றிய  நகரின் கட்டமைப்பு, அகத்தளம் என்றால் என்ன? அடுமனையாளர்களும், அணி செய்யும் ஆணிலிகளும் எங்கு வைக்கப்பட்டிருப்பார்கள்?  அகம் படியினர்  இல்லாமல் அரச குடும்பத்தினர் எங்கும் அவை புக மாட்டார்களா? 

அரசையும் அரசரையும் அமைச்சர் எந்த அளவிற்கு கட்டுப்படுத்த இயலும்? முதன்மைச் சேடியும் அரசியும் எவ்வாறு ஆடிப்பவைகளாக தோற்றமளிப்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் தர்க்க ரீதியில்  மிக விரிவாக ஆசிரியர் சொல்லிக்கொண்டே செல்கிறார் முக்கியமாக யானை, குதிரை, ஓநாய், நரி, குரங்கு என்று பிராணிகளைக் குறித்தும் மனிதர்களிடத்தே அவைகள் பேணும் உறவைக் குறித்தும் அவர் எழுதியதை தனி புத்தகமாகவே வெளியிடலாம்.




மனிதர்களிடையே முதன்மையாக  உறவுகளிடையே உள்ள பாசம், பிணைப்பு, வஞ்சம், துரோகம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், காதல், காமம், தியாகம் போன்ற உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கிய மகாபாரத காப்பியத்தை அதன் சாராம்சம்  குலையாமல் அங்கங்கே Magical Realism கலந்து ஒருவரால் இத்தனை விரிவாக எழுத முடியும் என்பதே பெரும் வியப்பு அதிலும் ஒவ்வொரு கதை மாந்தரும் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் இடங்கள் வாசகர்களாகிய நமக்குப்  பெரும் வாழ்கைப்  பாடங்கள்.

இந்நாவல் வரிசையை படிக்கும் எவரும் வாய் விட்டு சிரிக்காமலும் , கண் கலங்காமலும், கோபத்தில் மூக்கு நுனி சிவக்காமலும், அருவெறுப்பில் முகம் சுளிக்காமலும், பதட்டத்தில் இதயத் துடிப்பு அதிகரிக்காமலும் முக்கியமாக எப்போதும் விழித்திருக்கும் ஒற்றைப் பீலிக் கண்ணின் பார்வையில் படாமலும்  இருந்திருக்கவும்  முடியாது ஏனென்றால் கதாபாத்திரங்களோடு பயணிக்காமல் அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் இந்நாவலை வாசிக்கவோ, ரசிக்கவோ, படித்து முடிக்கவோ முடியாது. ஒரு சில அத்தியாயங்களை வாசிக்கையில் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் அன்றிரவு தூக்கம் தொலையும்.




வெண்முரசை மறுபடியும் படித்தேனென்றால் அது முற்றிலும் புதிய கோணத்தில் புதுப் பொருள் கொண்டு எழுந்து வரும் என்பதில் ஐயமில்லை 

இந்நாவலை வாசித்து முடிக்கையில் உணர்ந்த ஒன்று "மகாபாரத காப்பியத்தில்  எந்த ஒரு கதை மாந்தரையும் முழுமையாக விரும்பவோ வெறுக்கவோ முடியாது". மாயக்  குழலோனும் இதில் அடக்கம்!!!




நேரமிருந்தால் பொறுமையுடன் இந்நாவலை வாசியுங்கள்.. வாசித்து முடித்திருப்பின் உங்கள் அனுபவங்களை என்னுடன்  பகிர்ந்து கொள்ளுங்கள்.


Comments

Popular posts from this blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

மகாராஜா