Parking (Tamil)
சில திரைப்படங்களின் கதையே எதிர்பாரா திருப்பங்களுடனும் முன்னும் பின்னும் பரபரப்பாக நகரும் நிகழ்வுகளுடனும் சுவாரசியமாக இருக்கும். இப்படிப்பட்ட படங்களுக்கு திரைக்கதை அவ்வளவு முக்கியம் இல்லை ஆனால் சில திரைப்படங்களின் கதையோ ஒரு வரியில் சொல்லக்கூடியதாக இருக்கும் இயக்குனரும் அதை தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தி விடுவார் அவ்வளவு ஏன் ட்ரைய்லர், Sneak Peek-லேயே நாம் தெரிந்து கொண்டுதான் படம் பார்க்கவே செல்வோம் அப்படிப்பட்ட படங்களுக்கு திரைக்கதையும் பொருத்தமான நடிகர்கள் தேர்வும் மிக அவசியம் அவைகளால் மட்டுமே பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் திரையங்குகளில் அமர வைக்க இயலும். இதில் "Parking" இரண்டாவது ரகம்.
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் நடிகர்களை வைத்துக் கொண்டு, Easy ஆக கணிக்கக்கூடிய திரைக்கதையையும் எழுதி விட்டு Commercial Elements என்று கூறிக்கொண்டு கதைக்கு தேவையற்ற மசாலாக்களை சேர்க்காமல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணாவிற்கு பாராட்டுக்கள்.
அளவற்ற கோபம் பழி உணர்ச்சியைத் தூண்டும் அதுவே மனிதனை மிருகமாக மாற்றி விடும். சிக்கனம் என்ற பெயரில் குடும்பத்தில் உள்ளவர்களின் சிறு சிறு ஆசைகளைக் கூட பூர்த்தி செய்யாமல் இருப்பதற்குப் பேர் தியாகம் அல்ல. நம்மை சுற்றி இருப்பவர்களின் அறிவுரைகளாலும் அடுத்தவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் அவரை எடை போடுவதாலும் (Judging Others) நாம் எடுக்கும் முடிவுகள் வெகுவாக பாதிக்கப்படும். அனுபவத்தால் ஈட்டப்பட வேண்டிய வாழ்க்கைப் பாடங்களை அறிவுரைகளால் புகுத்த முயலக் கூடாது.
மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தையும் கூறுவது தெரியாமல் கூறிச்சென்று படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு கட்டத்திற்கு மேல் படத்தின் போக்கு நமக்கு சற்று சலிப்பை வரவழைப்பதும் ஹரிஷ் கல்யாணிற்கும் MS பாஸ்கருக்கும் இடையேயான பிரச்சனை தீர்ந்து சுமூகமாக அவர்கள் இணைய வேண்டும் என்று நம்முடைய "Middle-Class Mindset" ஆசைப்படுவதும் இயற்கையே!!
MS பாஸ்கரின் நடிப்புத் திறனை சிலாகிக்க தனிக்கட்டுரைதான் எழுத வேண்டும். ரமா ராகவேந்திராவுக்கு படம் முடியும் தருணத்தில் நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அதை அவரும் நன்றாகவே பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்.
ஹரிஷ் கல்யாண், இந்துஜா, இளவரசு, MS பாஸ்கரின் மகளாக, மைத்துனராக வருபவர்கள் முக்கியமாக அயன் வண்டிக்காரர் என அனைவரும் கதாபாத்திரத்தின் தேவையை உணர்ந்து உரிய நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
Hulu -வில் காணக்கிடைக்கும் இப்படத்தை கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம் ஓரிரு வன்முறைக் காட்சிகளை Fast Forward செய்தால் குழைந்தைகளுடனும் கண்டு மகிழலாம்.
Comments
Post a Comment