விடுதலை 1 & 2
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன். இளவரசு மற்றும் பல்வேறு அபிமான நட்சத்திங்களின் நடித்து இளையராஜா இசையில் 2023-ம் ஆண்டில் விடுதலை பாகம் ஒன்று வெளியானது.
"வழி நெடுக காட்டு மல்லி" என்று இளையராஜாவின் குரலில் வந்த பாடல் தாறுமாறாக ட்ரெண்டிங் ஆனதில் அனைவருக்கும் இப்படம் அறிமுகமானது.
தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் 2024 டிசெம்பரில் வெளிவர இவ்விரு பாகங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக Amazon Prime-ல் சமீபத்தில் பார்த்தேன் அதன் விளைவே இந்த விமர்சனம்!
விடுதலை 1
மலைக்கிராமத்தில் போலீஸ் டிபார்ட்மெண்டில் ஜீப் Driver ஆக வேலை கிடைக்கப்பெற்று அங்கு வரும் சூரி-யின் குரல் வழியே 80-களில் கதை பயணிக்கிறது.
மக்கள் படை என்ற இயக்கம் தீவிரவாத இயக்கமாக அரசால் முத்திரை குத்தப்பட்டு அதன் தலைவரான வாத்தியார் என்னும் பெருமாளை காவல் துறை முகாம் அமைத்து தீவிரமாக தேடி வருகிறது. சமீபத்தில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு அவர்களின் கைவண்ணமே என்று கண்டறியப்பட்டு அவ்வியக்கத்தை ஒடுக்கிய ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு அரசால் தள்ளப்பட்ட காவல் துறை தங்களுடைய அத்துமீறல்களை கிராம மக்களின் மேல் அவிழ்த்து விடுகிறது.
கதாநாயகனாக பதவி உயர்வு பெற்ற சூரி கதையின் நாயகனாக மிக நேர்மையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மற்ற நடிக, நடிகைகளும் தான். சேத்தனை இந்த கதாபாத்திரத்திற்கு இயக்குனர் எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை..அட்டகாசம்!
"மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி" என்பது போல காவல் துறை எவ்வாறு அரசாங்கத்திற்கும் குற்றவாளிகளுக்கும் இடையே அல்லல் படுகிறது அதன் உள்ளே ஒளிந்து கிடக்கும் சாதி, இன, வர்க்க வேறுபாடுகளால் எந்த Extend வரை செல்லத் துணிகிறார்கள் என்பதை மிக சாவகாசமாக பல்வேறு காட்சிகளின் மூலம் விளக்கும் இயக்குனர் கிளைமாக்சில் சில பல ஹீரோயிச காட்சிகளை சூரிக்கு வழங்கி பெருமாளை கைது செய்வதுடன் படத்தை முடித்து வைக்கிறார்.
விடுதலை 2
முதல் பாகத்தில் கையாண்ட அதே களத்தை தொடர்ச்சியாக கொண்டு அதில் பெருமாளான விஜய் சேதுபதியின் கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.
இங்கு கீழ் சாதியினரின் மேல் உயர் வர்க்கத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்து அவர்களின் முன்னேற்றத்திற்காக கம்யூனிச சித்தாந்தத்தை கையில் கொண்டு போராடும் தலைவராக கிஷோரை அறிமுகப்படுத்துகிறார்.
அவரோடு இணையும் விஜய் சேதுபதி எதனால் வன்முறை பாதையை நோக்கி நகர்கிறார் மஞ்சு வாரியார் எவ்வாறு அவருக்கு உதவுகிறார் "தினம் தினமும் உன் நெனப்பு" பாடல் எங்கே வருகிறது போன்றவற்றை தெரிந்து கொள்ள பார்க்க வேண்டிய திரைப்படம் விடுதலை 2.
ஒரே மாதிரியாக நடித்தாலும் எவ்வாறு VJ எல்லா கதாபாத்திரத்திலும் கச்சிதமாக உட்காருகிறார் என்று தெரியவில்லை. எமோஷனல் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
Non Linear முறையில் காட்சிகள் நகர்வதால் Bore அடிக்கவில்லை எனினும் கதை எங்கும் நகரவே இல்லை என்ற உணர்வைத் தருகிறது.
கிஷோரும் VJ-யும் பேசும் தத்துவங்களால் படம் முடிவதற்குள் கம்யூனிசத்தின் மேல் நமக்கு ஓர் ஈர்ப்பு ஏற்படுவதை மறுக்க முடியவில்லை எனினும் அதனால் உண்டாகும் அழிவு அதைப் பற்றிய சிந்தனையை கேள்விக்குள்ளாக்குகிறது.
வெற்றிமாறனின் முந்தைய படங்களை பார்த்திருக்கீர்கள் என்றால் உங்களுக்குத் தெரியும் இருந்தும் சொல்கிறேன், வன்முறைக் காட்சிகள் எனக்கு பிடிக்காது என்றால் இது உங்களுக்குரிய படம் இல்லை.
குழந்தைகளுடன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
படம் முடிவதற்குள் இயக்குனர் ரொம்பத்தான் பாடம் எடுத்து விட்டார் என்று தோன்றினாலும் நம் சிந்தையை தூண்டக்கூடிய வசனங்கள் ஏராளம்!!
பின் குறிப்பு - ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் விடுதலை.
Comments
Post a Comment