Parasite - Korean Movie
2019- ஆம் ஆண்டு வெளிவந்து பல்வேறு விருதுகளை (ஆஸ்கார் உட்பட) வென்றெடுத்த "Parasite" திரைப்படத்தை இப்பொழுதுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வேலையில்லா திண்டாட்டத்தால் அவதியுறும் Kim குடும்பம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களாக கீழ்தளத்தில் (Basement) வாழ்கின்றனர். மேல்தட்டு குடும்பமான Park குடும்பத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைக்க Kim குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக திட்டமிட்டு எவ்வாறு அங்கே உள் நுழைகிறார்கள் என்பதும் அதன் விளைவு என்னவாக இருந்தது என்பதும்தான் "Parasite" படத்தின் கதை.
எனக்கு தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு தமிழ் படத்தைப் பார்ப்பது போலத்தான் இருந்தது. கடும் மழையால் வீட்டிற்குள் வெள்ளம் புகுவது, Fraud தனம் செய்யும் தனது குழந்தைகளை பெருமையோடு பார்க்கும் பெற்றோர்கள், எதிர்பாரா சூழ்நிலையில் சமயோஜித புத்தியை பயன்படுத்தாமல் அவசரப்பட்டு அவர்கள் எடுக்கும் முடிவுகள், வசதி படைத்தவர்கள் ஏழைகளை பார்க்கும் பார்வை, அவர்களுக்கென்று ஒரு வாசனை உண்டு என்று அருவெறுப்புடன் கூறுவது, பணத்தை வைத்து அவர்களை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நினைப்பு (வெளியே என்னவோ அவர்களை மரியாதையாகவே நடத்துகிறார்கள்?!)என்று ஒரு இந்தியப் படத்தை பார்த்த அனுபவம் இருந்தது.
Parasite படத்தை ஆஸ்கார் படமாக மாற்றியது அதன் திரைக்கதை மற்றும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் தான் . எந்த Emotions-ம் அளவுக்கு அதிகமாகவோ over-acting மூலமாகவோ காட்டப்படவில்லை. அடுத்து இதுதான் நடக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது என்றாலும் அந்நிகழ்வுகளை கதைக்குள் கொண்டு வரும் விதம் பாராட்டத்தக்கதாகவே இருந்தது.
இப்படத்தின் மூலம் இயக்குனர் என்ன கூற வருகிறார், அதில் ஒளிந்திருக்கும் மெசேஜ் என்ன, குறியீடு என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது ஆனால் நீங்கள் இப்படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றால் கூகுள் செய்யாமல் பாருங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்.
Comments
Post a Comment