THE STORY OF THE SOURASHTRAS - புத்தக விமர்சனம்
THE STORY OF THE SOURASHTRAS - இந்த புத்தகம் வீட்டினுள் வந்ததிலிருந்து நான் சந்திரமுகி ஜோதிகாவாக மாறிவிட்டேன். அவர் கண்கள் மின்ன "நெத்திச்சுட்டி, ஆரம், ஒட்டியானம்" என்று ஒவ்வொன்றாக நகை பெட்டியிலிருந்து எடுத்து சூப்பர் ஸ்டாரிடம் காட்டுவாரே அதைப்போலவே எங்கள் வீட்டிற்கு வரும் ஒவொருவரிடம்
"வெங்கடரமண பாகவதர் உங்கள் ஊர் தான், அவர் வீட்டை பார்த்திருக்கிறீர்களா?!
"மத்திய பிரதேச கல்வெட்டில் நம்மை பற்றிய குறிப்புண்டு"
"M.S. "சுப்புலெட்சுமியை சினிமாவில் பாடகியாக அறிமுகப்படுத்தியதே நாம் தான் தெரியுமோ"
"தமிழ் நாட்டிலேயே பெரிய ஸ்தாபனங்களுக்கு ஆடைகள் Supply செய்யும் only woman entrepreneur நம் சமூகத்தவர் தெரியுமா?!" என்றெல்லாம் இப்புத்தகத்தை புரட்டிக் காட்டி சிலாகிப்பதே என் வழக்கமாகிவிட்டது!
"நம் வரலாற்றைப் பற்றிய புத்தகங்கள் எத்தனையோ வெளிவந்திருக்கின்றன மற்றோரு புத்தகம் எதற்கு, அதுவும் ஆங்கிலத்தில்! விலை ஏன் இவ்வளவு?! சமூகத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கான புத்தகமா இது?! போன்ற கேள்விகள் என் மனதிலும் இருந்தது.
இருந்தும் நான் ஏன் வாங்கினேன்?!
என் குழந்தைகளுக்காக. வருங்காலத்தில் அவர்கள் இதை ஒரு Reference ஆக வைத்துக் கொண்டு மனதில் எழும் அல்லது நம் பூர்வீகத்தைப் பற்றி மற்றவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறலாம் ஏன் புத்தகத்தையே அவர்களிடம் கொடுத்தும் படிக்கச் சொல்லலாம்.
புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து சில பக்கங்களிலேயே என் சந்தேகங்களுக்கெல்லாம் விடை கிடைத்து விட்டது காரணம் புத்தகத்தின் தரம்!
கண்களைக் கவரும் வண்ண புகைப்படங்கள், நகைச்சுவை கலந்த சிந்திக்கத் தூண்டும் கார்ட்டூன்கள், சௌராஷ்ட்ரா சபாக்களில் பாதுகாக்கப்படும் ஆவணங்களின் நகல்கள், மிக எளிய ஆனால் ரசிக்கக்கூடிய வார்த்தைகளால் பிண்ணி பிணையப்பட்ட வாக்கியங்கள், காணொளிகளை காண Youtube-ற்கு உங்களை அழைத்துச் செல்லும் QR Code-கள். முக்கியமாக ஆசிரியர்கள் time travel செய்வதைப் போல வரையப்பட்ட கார்ட்டூன்கள் என்னை மிகவும் கவர்ந்தன, brilliant idea என்று சொல்லத் தூண்டின!
புத்தக ஆசிரியர்களான அனிதா ராஜராஜனும் பிஸ்வஜித் பாலசுப்ரமணியனும் எதற்காக இப்புத்தகத்தை எழுத ஆரம்பித்தோம் என்பதிலிருந்து துவங்கி நாம் புலம்பெயர்ந்த கதையை முடிந்த மட்டும் ஆதாரங்களோடு சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.
300 பக்கங்கள் அடங்கிய இப்புத்தகத்தில் 19 சாப்டர்களில் கலை, இலக்கியம், மொழி, கல்வி, ஆன்மீகம், சுதந்திர போராட்டம், சமூக சேவை என பன்முகத்தன்மையோடு விளங்கிய நம் மக்களின் கடந்த காலத்தை பார்த்து புல்லரித்து போன நமக்கு நிகழ் காலத்திலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் முகங்களை அறிமுகம் செய்து நம் ஆர்வத்தை தூண்டுகிறார்கள்.
நமது கடந்த காலத்தைப் பற்றி கூறப்படும் கதைகள் எல்லாம் புனைவு தானே?! எதற்காக அதை திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா?!
தேவையில்லை.
நாம் தமிழ் நாட்டில் செட்டில் ஆன பின்பு நடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாமே!
L.K.துளசிராம், NMR. சுப்பராமன்(மதுரை காந்தி), TMS இவர்கள் தானே?! என்கிறீர்களா?! இவர்கள் உடன் அறிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள் எண்ணற்றவர்கள் உள்ளனர். புத்தகத்தை வாசித்தால் புரிந்து கொள்வீர்கள்.
அத்தோடு நிகழ்காலத்தில் நம் சமூக மக்களை அரவணைத்து செல்லும் அமைப்புகள் என்னென்ன?! அவர்கள் செய்யும் சாதனைகள், சந்திக்கும் பிரச்சனைகள், உலகின் பல்வேறு நாடுகளில் செட்டில் ஆன நம் குழந்தைகளின் மனநிலை என்ன?! தெரிந்து கொள்ளலாமே.
அதெல்லாம் Whatsapp- ல் வருகிறதே என்கிறீர்களா?! அவ்வாறு சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் வந்த வேகத்திலேயே காற்றோடு பறந்து சென்று விடும் என்ற நிதர்சனத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் இப்புத்தகத்திற்காக தாங்கள் மேற்கொண்ட பயணங்கள், சந்திக்க முயற்சித்த - சந்தித்த நபர்கள், அவர்கள் உரையாடிய விதம், அவர்களின் மனநிலை போன்ற சுவாரசிய தகவல்களை புத்தக முடிவில் ஆவணப்படுத்தியுள்ளனர்.
பின் குறிப்பு : பல தரப்பட்ட வாசகர்களை கவரும் வண்ணம் வரும் காலங்களில் இப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்க்கவும் டிஜிட்டல் தளங்களில் பிரசுரிக்கவும் சேகரிக்கப்பட்ட இப்பாகத்தில் பயன்படுத்தப்படாத தகவல்களைக் கொண்டு இரண்டாம் பாகம் எழுதவும் திட்டங்கள் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
- நிர்மலா கணேஷ்

Comments
Post a Comment